Published : 06 Jun 2017 09:03 AM
Last Updated : 06 Jun 2017 09:03 AM

சீல் வைக்கப்பட்ட விதிமீறல் கட்டிடங்களில் மின்சாரம், குடிநீர் இணைப்பை துண்டிக்க திட்டம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்ட விதிமீறல் கட்டிடங்களில் உள்ள மின்சாரம், கழிவுநீர், குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வடபழனியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த குடியிருப்பில் குடியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். சென்னையை உலுக்கிய இந்த விபத்து குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த கட்டிடம் விதிமீறல் கட்டிடம் என சென்னை மாநகராட்சியால் கடந்த ஆண்டு சீல் வைக்கப்பட்டதும், கட்டிடத்தின் உரிமையாளர் கட்டிடத்தின் பின் பக்கம் வழி ஏற்படுத்தி, குறைந்த வாடகையில் பல குடும்பங்கள் குடியிருக்க அனுமதித்ததும் தெரியவந்துள்ளது.

இந்த கட்டிடத்துக்கு மாநகராட்சி சீல் வைத்ததை எதிர்த்து, கட்டிடத்தின் உரிமையாளர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அவருக்கு எதிராக தீர்ப்பு வந்ததால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கு, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கட்டிடத்தின் உரிமை யாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரி யமானது, உரிய அனுமதி இன்றி செயல்படும் ஒரு நிறுவனத்துக்கு சீல் வைத்தால், அப்போதே மின் இணைப்பையும் துண்டிக்கும். அதேபோன்று, இந்த விதி மீறல் கட்டிடத்துக்கு மாநகராட்சி சீல் வைத்த நிலையில், மின் இணைப்பை அப்போதே துண்டித்திருந்தால், அங்கு எந்த குடும்பமும் வசித்திருக்காது, மின் கசிவு விபத்தும் ஏற்பட்டிருக்காது. சீல் வைக்கப்பட்டது தெரிந்தும் மின் வாரிய ஊழியரும் பலமுறை அந்த கட்டிடத்துக்கு சென்று, மின் பயன்பாட்டு கணக்கீட்டையும் எடுத்துள்ளார். மின் கட்டணமும் தொடர்ந்து வசூலித்து வந்துள்ளது. சீல் வைக்கப்பட்ட கட்டிடத்துக்கு அதிக மின் பயன்பாடு இருப்பது குறித்து, மின்துறையும் மாநகராட் சிக்கு தகவல் தெரிவிக்காமல் மெத்தனமாக இருந்துள்ளது.

இது தொடர்பாக மின் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் சீல் வைத்த மாநகராட்சி நிர்வாகம், அதற்கு மின் இணைப்பு வழங் காதீர்கள் என இதுவரை கடிதம் எதுவும் வழங்கவில்லை. அவ்வாறு வழங்கினால், அரசின் அனுமதி பெற்று, சம்பந்தப்பட்ட கட்டிடங் களின் மின் இணைப்பைத் துண்டிப் போம். சீல் வைக்கப்பட்ட கட்டிடத் தில் நாங்களாக சென்று மின் இணைப்பைத் துண்டிக்க முடியாது. அவ்வாறு செய்தால், கட்டிடத்தின் உரிமையாளர் நீதிமன்றத்துக்கு செல்லும்போது, எங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்றார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

சென்னை மாநகரப் பகுதியில் கட்டிடம் கட்ட தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம்- 1971 மற்றும் அதன் வளர்ச்சி விதிகளின் கீழ் ஒப்புதல் பெற வேண்டும். அந்த ஒப்புதலில் குறிப்பிட்டவாறு மட்டுமே கட்டிடம் கட்டப்பட வேண்டும். ஒப்புதல் இல்லாமலும் கட்டக்கூடாது. மீறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கட்டிடம் விதிமீறல் கட்டிடமாக கருதப்படும்.

தற்போது தீ விபத்து ஏற்பட்டு, 4 பேர் பலியான கட்டிடமும் விதிமீறல் கட்டிடம் தான். அதற்கு கடந்த ஆண்டே சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று 120-க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளன. இந்த கட்டிடங்களுக்கு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டப்படி தான் நாங்கள் சீல் வைக்கிறோம். அப்போதே மின் இணைப்பைத் துண்டிக்கும் அதிகாரங்கள் அந்த சட்டத்தில் வழங்கப்படவில்லை. நீர் மற்றும் காற்று பாதுகாப்பு சட்டத்தில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே மின் இணைப்பையும் துண்டிக்கும் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு இருப்பதால் அவற்றால் முடிகிறது.

இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, விதிமீறல் கட்டிடம் என மாநகராட்சியால் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களுக்கு, உடனடியாக மின்சாரம், குடிநீர், கழிவுநீர் ஆகிய இணைப்புகளை துண்டிக்க மின்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரியம் ஆகியவற் றுக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்ப இருக்கிறோம். அதை எதிர்த்து கட்டிடங்களின் உரிமை யாளர் நீதிமன்றம் சென்றால், நீதிமன்ற உத்தரவை மாநகராட்சி பின்பற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x