Published : 30 Dec 2013 07:53 AM Last Updated : 30 Dec 2013 07:53 AM
புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி புதிய கட்சி தொடங்கவுள்ளார். அக்கட்சி மக்களைவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் நகர் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சமூக சேவகர் சென்னை டிராபிக் ராமசாமிக்கு பாராட்டு விழா சனிக்கிழமை மாலை ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த டிராபிக் ராமசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: "தமிழ்நாட்டில் பெருகிவரும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 'மக்கள் பாதுகாப்பு கழகம்' (ம.பா.க) என்கிற பெயரில் புதிய அரசியல் கட்சியை பொங்கல் தினத்தன்று தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை ம.பா.க. சார்பில் நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தென் சென்னை தொகுதியில் புதிய கட்சியின் அவைத்தலைவரான நான் போட்டியிட உள்ளேன்.
புதிய அரசியல் கட்சியான மக்கள் பாதுகாப்புக் கழகம் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அமையும். தமிழ்நாட்டில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
தற்போதுள்ள அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் கட்சியின் முக்கிய நோக்கம். மக்களிடம் இந்த இரண்டு கட்சிகளின் மீதிருந்த நல்ல எண்ணம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, தற்போது இல்லாவிட்டாலும் சில ஆண்டுகளுக்குள் எங்கள் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்" என்றார் அவர்.
WRITE A COMMENT