Published : 31 Mar 2017 07:10 PM
Last Updated : 31 Mar 2017 07:10 PM

மீனவர் பிரிட்ஜோ படுகொலையை விமர்சித்ததாக எச்.ராஜா மீது தங்கச்சிமடம் காவல்நிலையத்தில் மீனவர்கள் புகார்

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோ பற்றி அவதூறாக பேசியதாகக் கூறி, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது தங்கச்சிமடம் காவல்நிலையத்தில் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை பிரதமர் மக்கள் மருந்து இயக்கத்தின் சார்பில் பட்டுக்கோட்டையில் மத்திய அரசின் மருந்து கடைகளை திறந்து வைத்த பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பின்போது மீனவர் பிரிட்ஜோ படுகொலை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, 'ஏன் விடுதலைப் புலிகள் பிரிட்ஜோவை கொலை செய்திருக்கக் கூடாது' என்றார்.

இது குறித்து வெள்ளிக்கிழமை தங்கச்சிமடம் காவல்நிலையத்தில் பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நல்லதம்பி அளித்த புகார் மனு விவரம் வருமாறு:

''கடந்த மார்ச் 6 அன்று இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பிரிட்ஜோ (21) உயிரிழந்தார். ஜெரோன் (27) என்ற மீனவர் காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து 'இலங்கை கடற்படையினர் மீது மண்டபம் கடலோர காவல் படை நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 (கொலை) மற்றும் 307 (கொலை முயற்சி ) ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிற்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா விடுதலைப் புலிகள் தான் மீனவர்களை சுட்டுக் கொன்றனர் என்று இலங்கை கடற்படையினருக்கு ஆதரவாகவும் மீனவர்களை அவதூறாகவும் பேசி வருகிறார். இது மீனவ மக்களிடையே கொந்தளிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே எச். ராஜா மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x