Published : 08 Oct 2014 08:43 AM
Last Updated : 08 Oct 2014 08:43 AM
‘சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை’ என்று ஹரியாணா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியதின் மூலம் ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க மோடி முடிவு செய்துவிட்டார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஜெயலலிதா கைது விவகாரத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக்கொள்ள மாநில கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என பாஜக கருதுகிறது. அதன் முதல்கட்டமாகத்தான் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரிய கட்சிகள் எல்லாம் புறக்கணித்த நிலையில் அதிமுகவை எதிர்த்து பாஜக போட்டியிட்டது. பல இடங்களில் அதிமுக பாஜக இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டன. அப்போது முதல் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அதிமுகவை கடுமையாக விமர்சித்துவருகிறார்.
தற்போது ஜெயலலிதா சிறையில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் அதிமுகவை எதிர்த்து முழு வீச்சுடன் செயல்படும்படி பாஜகவினருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ஹரியாணா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘எனது அரசு மக்களின் ஆதரவில் இயங்கி வருகிறது. எங்களுக்கு சிறையில் இருப்பவர்களின் ஆதரவு தேவையில்லை. அதேபோல் மாஃபியாக்களின் ஆதரவும் தேவையில்லை’ என்று பேசினார். அரசுத் தேர்வாணைய ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் இந்திய தேசிய லோக்தளம் கட்சித் தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலாவை மனதில் வைத்தே மோடி பேசியதாக ஹரியாணா மக்கள் நினைக்கலாம். ஆனால், பீகாரின் லல்லு பிரசாத் யாதவையும் தமிழகத்தின் ஜெயலலிதாவையும் மனதில் வைத்துதான் அவர் அப்படி பேசியிருக்கிறார்.
இவ்வாறு பாஜக நிர்வாகிகள் கூறினர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், “பிரதமர் பதவிக்கான போட்டியில் ஜெயலலிதாவின் பெயர் எப்போது அடிபட்டதோ அப்போதே அதிமுகவுக்கு மோடி குறி வைத்துவிட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பெரிய கூட்டணி அமைத்தும் பாஜகவுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது மோடியின் கோபத்தை அதிகரித்தது. ‘ஊழல் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் மோடி பேசியதற்கும் இதுதான் பின்னணி காரணம். ‘எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான் ஊழல் வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும். ஒருவேளை வழக்கு இழுத்தடித்தால் அதற்கான காரணத்தை உயர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை கடிதம் எழுத வைத்ததும் அவர்தான். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக மோடியிடம் சுப்பிரமணியன் சுவாமி கேட்டபோது, ‘நீதிமன்ற விசாரணைகளில் தலையிட மாட்டேன்’ என்று மோடி கூறியிருக்கிறார். இதையெல்லாம் மோடி ஜெயலலிதா மோதலின் விளைவுகளாவே கருதவேண்டி உள்ளது’’ என்றனர்.
நெருங்கும் திமுக
இன்னொரு பக்கம் பாஜகவை சத்தமில்லாமல் நெருங்க முயற்சி செய்துவருகிறது திமுக. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபிறகு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மோடியை கருணாநிதி பாராட்டி வருகிறார். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய கருணாநிதி, ‘இந்திய பிரதமர்களிலேயே ஆற்றல் மிக்கவர் மோடி’ என்றார்.
சென்னை வந்த சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அதுபற்றி கருத்து தெரிவித்த கருணாநிதி, ‘மோடியின் புகழுக்கு ரவிசங்கர் பிரசாத் களங்கம் விளைவித்துவிடக் கூடாது’ என்றார். பாஜகவை திமுக நெருங்க முயற்சிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும், ‘இதனால் தங்களுக்கு என்ன பலன்’ என்ற யோசனையில் இதுவரை பிடிகொடுக்காமல் இருக்கிறது பாஜக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT