Published : 11 Apr 2015 07:25 PM
Last Updated : 11 Apr 2015 07:25 PM

பள்ளிக் கல்விக்கு பாடம் சொல்லும் மாணவர் கொண்டாட்டம்!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முடிவடைந்துவிட்டன. கடைசி தேர்வின் அறையை விட்டு வெளியேறியதும் மாணவர்கள் மத்தியில் அப்படி ஒரு கொண்டாட்டம். சுதந்திரம் அடைந்துவிட்டதைப் போன்ற ஆனந்தத் தாண்டவம்.

பள்ளி வாழ்க்கையில் இருந்து விடுபடுவது வரம் என்ற நினைப்புதான் இந்தக் கொண்டாட்டங்களுக்குக் காரணமா? அல்லது இயல்பான மகிழ்ச்சி தானா? மனப்பாடத்துக்கு முக்கியத்துவம் இருப்பதால் மன அழுத்தம் தரும் கல்வி முறையில் இருந்து மீள்வதன் வெளிப்பாடா? பள்ளி ஆசிரியர் சூழ் உலகில் இருந்து விடுபடும் நினைப்பா? என்று பள்ளிக் கல்வி சார்ந்தவர்களிடம் கேட்டேன்.

ரா.தாமோதரன்,பள்ளி ஆசிரியர், தஞ்சை:

"நீங்கள் குறிப்பிட்ட அனைத்துமே இவற்றுக்குக் காரணம்தான். மாணவர்களின் எல்லையற்ற மகிழ்ச்சிக்கு முக்கியக் காரணமே வெறுப்பின் வெளிப்பாடுதான். சில பள்ளிகளில் தேர்வு முடிந்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி முடிக்கும் வரை ஆசிரியர்களிடையே ஒருவிதமான பதற்றம் நீடித்தது. அத்தகைய பள்ளிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதும் இங்கே கவனிக்கத்தக்கது.

கல்வி முறை, பாடத்திட்டங்கள் சார்ந்தும் மதிப்பெண்கள் சார்ந்தும் மாறிப்போய் விட்டது. எப்படியாவது படித்துத் தேர்ச்சி அடைய வேண்டுமென்ற நிர்பந்தம். மாலையில் வகுப்பு முடிந்ததும் சிறப்பு வகுப்புகள், வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என்றால் அறிவுரை, வீட்டில் இருந்து பெற்றோர்களை அழைத்து வரச் சொல்வது போன்றவை மாணவரை, படிப்பின் மீதே ஒரு வித அழுத்தத்தை ஏற்படச் செய்கின்றன. இதற்கு மாற்று என்றால், மதிப்பெண் முறையை விடுத்து, தரநிலை மதிப்பீட்டு முறையை கொண்டுவரலாம்.

அடிப்படைக் கல்வித் திட்டம், தேர்ச்சி முறைக் கல்வித் திட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. சரியான விடையை எழுதியவர்களுக்கும், எழுதாதவர்களுக்கும் ஒரே வித்தியாசம்தான். புத்திசாலித்தனம் அங்கேதான் நிர்ணயிக்கப்படுகிறது. கல்வி என்பது ஒன்றை அறிவது; புரிந்துகொள்வது. மனப்பாடம் செய்து ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை.

ஆசிரியர்கள் திலீப், விஜயலட்சுமி, தாமோதரன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு

ஒரு மாணவர், கல்வியின் பின்புலத்தை அறிந்துகொள்ள வேண்டும். சாலைப் போக்குவரத்து குறித்துப் படிக்கிறோம் என்றால், அதை வாழ்வியலில் பயன்படுத்த வேண்டும். மொத்தத்தில் வாழ்க்கையை தைரியமாய் எதிர்கொள்ள வேண்டிய திறன்களை வளர்க்கும் விதமான மாற்றுக் கல்வித் திட்டம் அவசியமாகிறது.

டி.விஜயலட்சுமி,ஆசிரியை, கண்ணமங்கலம்:

"மாணவர்களின் கொண்டாட்டத்தில் எந்தத் தவறும் இல்லை. தேர்வு குறித்த அச்சங்கள் நீங்கிய மாணவர்களின் இயல்பான கொண்டாட்டங்களாகத்தான் இதைப் பார்க்கிறேன். அம்மாக்கள் சமையல் அறையில் வேலை முடிந்தவுடன் ஆசுவாசம் அடைவது போலத்தான் இதுவும். காலையில் பள்ளிக்குச் செல்ல வேண்டும், படிக்க வேண்டும், மாலையில்தான் விளையாட முடியும் என்ற அன்றாட நிர்பந்தங்களில் இருந்து விடுபட்டு நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் செய்ய முடிகிற நிலை வரும்போது மாணவர்கள் குதூகலமடைகின்றனர்.

இன்றைய சமுதாயம் பொருளாதார அளவில் பெரும் மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் சந்தித்து வருகிறது. எதற்கெடுத்தாலும் ட்ரீட் என்னும் கலாச்சாரம் பரவி வருகிறது. சிறு விஷயங்களைக் கூடப் பெரிதாய்க் கொண்டாடுகிறோம். இந்தக் காலகட்டத்துக்கு ஏற்றாற்போல இப்போதைய மாணவர்களும் பொதுத் தேர்வுகள் முடிவதைக் கொண்டாடுகிறார்கள்."

ஸ்ரீதிலீப்,பள்ளி ஆசிரியர், சத்தியமங்கலம்

"இந்த வயதிலேயே இதுமாதிரியாக கொண்டாட்டங்கள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளின் மீதும், மதிப்பெண்கள் மீதும் வைக்கப்படுகின்ற அழுத்தங்கள்தான் மாணவர்களை நெருக்குதலுக்கு ஆளாக்குகிறது. இவற்றுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை மற்ற எல்லாத் தேர்வுகளுக்கும் கொடுத்தால் மாணவர்கள் தேவையில்லாத பதற்றத்துக்கு ஆளாகமாட்டார்கள்.

மாணவர்கள், இது தேர்வு மட்டுமே என்ற மனநிலையோடு அணுக வேண்டும். தேர்வையே சுகமாக எழுதினால், தேர்வு முடியும்போது கொண்டாட்ட மனநிலை ஏற்படாது. மாறாக, அற்புதமான பள்ளி நினைவுகளைச் சுமந்துகொண்டு, பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பிரியாவிடை தருவார்கள்."

பிரின்ஸ் கஜேந்திர பாபு,கல்வியாளர்:

"இது உண்மையான, மகிழ்ச்சிகரமான கொண்டாட்டமே இல்லை. ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்குப் போகும் நிரந்தமில்லாத ஒரு விஷயத்தைக் கொண்டாடுகிறார்கள். நமது கல்வி முறையில் எதற்காக, எப்படி மகிழ்வது என்று கூடச் சொல்லித் தரவில்லை. அடக்குமுறையில் இருந்து விடுதலை அடைவதாகத்தான் இது மாணவர்களால் பார்க்கப்படுகிறது. தேர்வுகள், நிறைவு கொடுக்கக் கூடியவையாக இருந்தால், அடுத்தத் தேர்வு குறித்த தேடல் இருக்கும்.

'விடுதலை அடையும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியை உணர்வதுதான் தேர்வு' என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். மதிப்பெண்கள் குறித்த மிரட்டலில் கட்டுண்டு கிடக்கும் மாணவர்கள், வெளியே வரும் சுகமாகத்தான் தேர்வைப் பார்க்கிறார்கள். சமுதாயத்தில் இருக்கும் பிரச்சினைகள் எவற்றையும் மாணவர்கள் உணரவில்லை. உணரும் விதமாகக் கல்வி அமைப்பு இல்லை. நமது கல்வி, சகோதரத்துவத்தை, ஜனநாயகத்தை, மெய்யான கல்வியைக் கற்றுத் தரவேண்டும்."

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x