Published : 14 Jun 2016 08:09 AM
Last Updated : 14 Jun 2016 08:09 AM
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளை ரூ.15 கோடியில் புனரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. மழை காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வெள்ளநீரை கடலுக்கு கொண்டு செல்வதற்கான நீண்டகால திட்டம் குறித்தும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
சென்னையின் குடிநீர் ஆதாரங் களாக விளங்குபவை பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள். இவற்றின் மூலமாகத்தான் சென்னை முழுவதும் குடிநீர் விநியோகம் நடக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழை பெய்ததில், இந்த ஏரிகள் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அத் துடன், தொடர் மழையால் இந்த ஏரிகளின் கரைகளும் வலுவிழந்தன.
இதை கருத்தில் கொண்டு, இந்த ஏரிகளில் வழக்கமான பராமரிப்புப் பணியை மட்டுமே மேற்கொள்ளாமல், சிறப்பு கவனம் செலுத்தி புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதற்காக ரூ.15 கோடி ஒதுக்கப் பட்டது. பராமரிப்புப் பணி கடந்த மாதம் தொடங்கியது.
பொக்லைன், கான்கிரீட் மிக்ஸர் மிஷின் உள்ளிட்ட இயந் திரங்கள் உதவியுடன் ஏரிகள் பரா மரிப்புப் பணியில் 100 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏரிகளின் கரைகள், பக்கவாட்டு சுவர்கள், தண்ணீர் வழிந்தோடிகள் ஆகிய வற்றை பழுதுநீக்கி பலப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வரு கிறது. நீர்வரத்துக் கால்வாயும் சீரமைக்கப்படுகிறது. பணிகள் அடுத்த மாதத்துக்குள் முடியும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு போல மீண்டும் ஒரு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. பருவகாலத்தில் கனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டால், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வெள்ளநீரை கடலில் கொண்டுபோய் சேர்ப்பதற்கான நீண்டகால திட்டம் குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
அதன்படி, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மட்டு மின்றி, ஆங்காங்கே உள்ள சிறிய கால்வாய்களிலும் ஆக்கிரமிப்பு களை அகற்றி, தூர்வாரி, கரையைப் பலப்படுத்துவது, கால்வாய்களில் குப்பை கொட்டுவதைத் தடுப்பது, அதற்காக கால்வாய்களின் இருபுறமும் உயரமாக தடுப்புச் சுவர் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வரும் அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீண்டகாலத் திட்டத்துக்கான பூர்வாங்கப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஏரிகள், வடிகால் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.
‘இன்னும் 5 மாதங்களுக்கு தண்ணீர் கஷ்டம் வராது’
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கனஅடி. தற்போது 4,870 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 1,578 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.
‘‘வெப்பத்தால் ஆவியாவது, தரையில் உறிஞ்சப்படுவது ஆகிய வகையில் விரயமாகும் நீரை உத்தேசமாகக் கணக்கிட்டுப் பார்த்தாலும், ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு, இன்னும் 5 மாதங்களுக்கு சென்னை மாநகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம்’’ என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT