Published : 09 Jul 2016 01:52 PM
Last Updated : 09 Jul 2016 01:52 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி கரையிலும், கால்வாய்களிலும் பாரம்பரியமிக்க படித்துறைகள் பாழாகி வருகின்றன. மாநகருக்குள் பல படித் துறைகள் குப்பைகளால் மூடப்பட்டுள்ளன. இவற்றை புதுப்பித்து பழம்பெருமையை மீ்ட்டெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
தாமிரபரணியால் வளமும் வாழ்வும் பெறும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆற்றங்கரையிலும், பல்வேறு கால்வாய்களிலும் நூற்றுக்கணக்கான படித்துறைகள் முன்னோர்களால் அமைக்கப்பட்டிருக் கின்றன. ஆற்றங்கரையோரத்தில் குடியிருந்தவர்கள் இந்த படித்துறைக்கு வந்து ஆற்றில் குளிப்பது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. விழா காலங்களில் கோயில்களில் குடமுழுக்கு, விசேஷங் களின்போதெல்லாம் தாமிரபரணி ஆற்றிலி ருந்து புனித நீரை எடுத்துச்செல்லும் பாரம்பரிய சடங்குகள் இப்போதும் நடைபெறுகின்றன. கால்வாய்களின் கரைகளில் கட்டப்பட்ட படித்துறைகள்தான் குளியலுக்கும், துணி துவைப்பதற்குமான கேந்திரமாக இருந்து வந்தது. மக்கள் பயன்பாட்டுக்கென்றே இத்தகைய படித்துறைகளை பலர் தானமாக கட்டித்தந்துள்ள வரலாறும் இருக்கிறது.
ஆனால், அந்த படித்துறைகளில் பெரும்பாலானவை முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்து வருகின்றன. சில படித்துறைகள் முற்றி லும் சிதைந்து இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.
சுகாதாரச் சீர்கேடு
குறிப்பாக திருநெல்வேலி மாநகரப் பகுதியில் ஆற்றங்கரைப் படித்துறைகள், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய்களின் படித்துறைகள் பல பாழ்பட்டு உடைந்து கிடக்கின்றன. பாளையங்கால்வாயில் பல படித்துறைகள் இருக்கும் இடமே தெரியாத வகையில் குப்பைகளாலும், கழிவுகளாலும் மூடப்பட்டிருக்கின்றன
பாளையங்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட தற்போது 30 வயதை கடந்துள்ள இப்பகுதியை சேர்ந்த பலருக்கும் இந்த பாளையங்கால்வாய் படித்துறை பகுதிதான் நீச்சல் கற்கும் களமாக இருந்தது.
இப்பகுதி மக்கள், கால்வாய் தண்ணீரை குடங்களில் எடுத்துச் சென்று குடிநீராகப் பயன்படுத்திய காலங்களும் உண்டு. இப்போது கால்வாய் தண்ணீரில் கால்வைத்தாலே நோய் வந்துவிடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு கால்வாய் களும், அதன் படித்துறைகளும் குப்பைக் கழிவுகள் கொட்டும் இடமாக மாற்றப்பட்டி ருக்கின்றன.
மாநகராட்சி கவனிக்குமா?
தாமிரபரணி பொதிகை மலையில் பூங்குளத்தில் உற்பத்தியாகி புன்னக்காயலில் கடலில் கலப்பது வரையிலான தூரத்தில் அது திருநெல்வேலி மாநகராட்சியை கடக்கும்போதுதான் மிகப்பெரும் அளவுக்கு மாசுபடுவதாக ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. அவ்வாறு தான் பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய்களும் கழிவுகளை திறந்துவிடும் கால்வாய்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த கால்வாய்களை தூர்வாருகிறோம் என்ற பெயரில் கழிவுகளை வாரி கரையில் வைத்துவிட்டு செல்கிறார்கள். மழை பெய்யும்போது மீண்டும் அந்த கழிவுகள் கால்வாய்க்குள் சென்றுவிடும் அவலம் நீடிக்கிறது. பொதுமக்கள் எவ்வித பொறுப்பும் இல்லாமல் கால்வாய்களை மாசடைய வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பாழ்பட்டு வரும் படித்துறைகள்
தாமிரபரணி கரையோரம், கால்வாய் படித்துறைகள், மண்டபங்களையெல்லாம் ஓவியமாக்கி ஆவணப்படுத்திக் கொண்டிருக்கும் ஓவிய ஆசிரியர் பொன். வள்ளிநாயகம் கூறியதாவது:
தாமிரபரணி கரையோரத்தில் திருப்புடைமருதூர், குறுக்குத்துறை, ஸ்ரீவைகுண்டம், அத்தாளநல்லூர் படித்துறைகள் முக்கியத்துவம் பெற்றவை. இதுபோல் ஆற்றங்கரையோரப் படித்துறைகளும், கால்வாய் கரைகளில் உள்ள படித்துறைகளும் மக்களின் வாழ்வோடு ஒன்றியவை. அவற்றின் மாண்பும், மகத்துவமும் இப்போது கெடுக்கப்பட்டு படித்துறைகள் பாழ்பட்டுக் கொண்டிருக்கின்றன. வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்ட பின்னர்தான் கால்வாய்களில் இருந்து வீட்டு உபயோகத்துக்கு தண்ணீர் எடுப்பது நின்றுபோனது. கால்வாய்களும் பாழ்பட்டுவிட்டன.
அக்கா குருவி வருமா?
முன்பெல்லாம் படித்துறைகளுக்கு குளிக்க வரும் பெண்கள் மஞ்சள் தேய்த்துவிட்டு மீதமுள்ள மஞ்சளை விட்டுச்சென்றுவிடுவார்கள். அந்த மஞ்சளை தனது அலகில் தேய்த்துக்கொள்ள அக்கா குருவி என்ற பறவையும் வந்து செல்லும். இப்போது அக்கா குருவியும் வரவில்லை. குளிக்கும் அளவுக்கு கால்வாய் தண்ணீரும் தூய்மையாக இல்லை என்றார் அவர்.
பாரம்பரியமிக்க படித்துறைகளை பாதுகாக்க திருநெல்வேலி மாவட்ட, மாநகர நிர்வாகங்கள் முன்வர வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT