Last Updated : 16 Mar, 2017 02:47 PM

 

Published : 16 Mar 2017 02:47 PM
Last Updated : 16 Mar 2017 02:47 PM

முத்துக்கிருஷ்ணன் மரணம்: உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி

முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் உறுதி கூறியுள்ளார்.

டெல்லியில் ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் கடந்த திங்கட்கிழமை தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டது. இது ஒரு மர்ம மரணம் எனக் கூறி, அவரது தந்தையான ஜீவானந்தம் டெல்லி போலீஸிடம் புகார் அளித்தார்.

மத்திய அரசின் தலையீட்டுக்குப் பிறகே, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரப்பட்டு வருகிறது.

இந்நிலையில்அவரின் உடல் புதன்கிழமை இரவு சென்னை வந்து, அங்கிருந்து சேலத்திற்கு சாலை வழியாக சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது.

அதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்துக்கு வழங்கினார். முத்துக்கிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம், தாய் அலமேலு மற்றும் 3 சகோதரிகளும் ஆட்சியரிடம் பேசினர். அப்போது, ''எங்கள் மகனின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அவரின் உடலில் தற்கொலைக்கான அடையாளம் எதுவும் இல்லை.

விடுதியில் இருந்து வெளிநாட்டு நண்பரின் அறைக்கு அவரை அழைத்துச் சென்றது யார்? முத்துக்கிருஷ்ணன் தைரியமானவர். நன்கு படிப்பார். அவரிடம் தற்கொலைக்கான மனநிலை இல்லை. எனவே அவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

நாங்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிறோம். எங்கள் குடும்பத்தினருக்கு அரசுப்பணி அளிக்க வேண்டும்'' என்றனர்.

இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் சம்பத், ''முதல்வரின் கவனத்துக்கு அனைத்தையும் எடுத்துச் செல்கிறோம். அவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். தமிழக அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்கும்'' என்று உறுதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x