Last Updated : 18 Jul, 2016 12:50 PM

 

Published : 18 Jul 2016 12:50 PM
Last Updated : 18 Jul 2016 12:50 PM

உயர் நீதிமன்ற கிளை தபால் அலுவலகத்தில் பணியாளர் பற்றாக்குறை: கூடுதல் கவுண்டர், ஊழியர்கள் நியமிக்க உத்தரவு

பணியாளர் பற்றாக்குறையால் பணிகள் தாமதமாகி வரும் சூழலில், உயர் நீதிமன்றக் கிளை அஞ்சலகத்தில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கவும், கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தபால் அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், இந்தியன் வங்கிக் கிளை உள்ளது. இந்த அலு வலகங்களை உயர் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மட்டும் அல்லாமல், நீதி மன்றத்தைச் சுற்றியுள்ள ஒத்தக்கடை, உல கநேரி, உத்தங்குடி, வளர்நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் அதிகளவில் பயன் படுத்துகின்றனர்.

அதே நேரம், தபால் அலுவலகத்தின் நிலை பரிதாபகரமாக உள்ளது. கூடுதல் கவுண்டர்கள் இல்லாதது, போதிய பணியாளர் இல்லாதது போன்ற காரணங்களால் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன. உயர் நீதிமன்றக் கிளையில் உள்ள தபால் அலுவலகம் ‘சி’ நிலை அலுவலகம் ஆகும். இங்கு தபால்களை கையாள்வதுடன், மணியார்டர் அனுப்புவது, மின்கட்டண வசூல், செல்வமகள் சேமிப்புத் திட்டம், பிற அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் என தபால்துறையின் அனைத்து சேவைகளும் வழங்கப்படுகின்றன.

உயர் நீதிமன்றத்தில் இருந்து 200 தபால்களும், இங்குள்ள 108 வழக்கறிஞர் சேம்பர்களில் இருந்து 200 தபால்களும் சேர்த்து தினமும் 400-க்கும் மேற்பட்ட தபால்கள் கையாளப்படுகின்றன. இது தவிர, தபால்துறையின் பிற சேவைகளும் அளிக்கப்படுகின்றன. ஆனால், இப்பணிகளை செய்வதற்கு போதுமான ஊழியர்கள் பணியில் இல்லை. தற்போது போஸ்ட் மாஸ்டர், ஊழியர், போஸ்ட்மேன் என 3 பேர் மட்டுமே உள்ளனர். ஒரு கவுண்டர் மட்டும் உள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்றக் கிளை தபால் அலுவலகத்தில் பணிகளில் தாமதம் ஏற்படுவதை தடுக்க கூடுதல் கவுண்டர்கள், கூடுதல் பணியாளர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் எம்.திருநாவுக்கரசு உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ‘உயர் நீதிமன்ற கிளை தபால் அலுவலகத்துக்கு தேவையான வசதிகள், பணியாளர்கள் எண்ணிக்கையை 2 மாதத்தில் முடிவு செய்து நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் கே. நீலமேகம் கூறியதாவது: ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள தபால் கிளை அலுவலகத்தில் 4 கவுண்டர்கள் உள்ளன. கூடுதல் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், இங்கு ஒரு கவுண்டர் மட்டும் உள்ளது. 3 ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். தபால் அலுவலகத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் உள்ளதால், வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தபால் அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வழக்கமான நாட்களை விட, தற்போது தபால் அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் உடனடியாக கூடுதல் கவுண்டர்களை திறக்க வேண்டும். கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். உயர் நீதிமன்ற கிளையில் செயல்படும் வங்கியைப் போல, தபால் அலுவலகத்தையும் நவீனப்படுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x