Last Updated : 28 Jun, 2017 02:00 PM

 

Published : 28 Jun 2017 02:00 PM
Last Updated : 28 Jun 2017 02:00 PM

புதுக்கோட்டை, நெல்லை, குமரி மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 3 பேர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அதில், ''அரசு விதித்துள்ள நடைமுறையைப் பின்பற்றாமல் பட்டியல் தயார் செய்யப்பட்டு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சட்டத்தை பின்பற்றாமல் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யக் கூடாது. எனவே, வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும், நியமனம் தொடர்பான செயல்களுக்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், என். ஆதிநாதன் அமர்வு, அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அது போன்ற நடைமுறைகளின் கீழ் நியமிக்கப்படவில்லை என்பது தெரியவருகிறது. எனவே புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மாவட்ட நீதிமன்றங்களில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

முன்னதாக, கரூர், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x