Published : 26 Apr 2017 10:39 AM
Last Updated : 26 Apr 2017 10:39 AM
நியூயார்க்கில் உள்ள ‘கால்ட்ன் ரோச்செல் ஏசியன் ஆர்ட் கேலரி’யில் சோழர் காலத்து பழமையான ஐம்பொன் சிலைகள் விற்பனைக்கு இருப்பதாக கடந்த 23-ம் தேதி ‘தி இந்து’வில் செய்தி வெளியானது. அது தொடர்பான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன.
நியூயார்க்கைச் சேர்ந்த கால்ட்ன் ரோச்செல் என்பவர் தனது ‘கால்டன் ரோச்செல் ஏசியன் ஆர்ட் கேலரி’ மூலமாக சோழர் காலத்து கல் நந்தி மற்றும் பத்ரகாளி சிலைகளை ஆஸ்திரேலிய அருங் காட்சியகத்துக்கு விற்றிருந்தார். இந்த சிலைகளுக்கு தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு (சி.ஐ.டி) பிரிவு போலீஸார் உரிமைகோரி இருப்பது குறித்தும் அதுகுறித்து விசாரணைகள் நடைபெற்று வருவது குறித்தும் ஏற்கெனவே ‘தி இந்து’வில் செய்தி வெளி யானது.
முன்னதாக, ஆஸ்திரேலிய அருங்காட்சியகமான ’நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா (என்.ஜி.ஏ)’ தங்களிடம் உள்ள கலைப் பொருட்களின் மூலப் பத்திரம் உள் ளிட்டவை குறித்து முழுமையாக விசாரணை நடத்துவதற்காக நீதி பதி க்ரீனன் என்பவரை நியமித் திருந்தது. இதையடுத்து, விசார ணைகளை மேற்கொண்ட க்ரீனன், கடந்த ஆண்டு விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில், ‘பத்ரகாளி சிலையை லண்டனைச் சேர்ந்த மகருக் தேசாய் என்பவரிடம் இருந்து ஜூன் 1993-ல் வாங்கிய தாக ரோச்செல் ஆவணம் கொடுத் திருக்கிறார். எனினும், 1993-க்கு முந்தைய காலத்தில் அந்த சிலை எங்கிருந்து யாரால் லண்ட னுக்கு தருவிக்கப்பட்டது என்பதற் கான மூலப்பத்திரங்கள் தெளிவாக இல்லை’ என்று குறிப்பிட்டிருக் கிறார் க்ரீனன்.
இதேபோல், கல் நந்தி சிலை குறித்த ஆவணத்தில், ‘மெக்சிகோ தூதர் ஒருவர் 1950-60 காலகட்டத்தில் ஃபிரான்ஸில் இருந்தார். அப்போது அடிக்கடி இந்தியா செல்வதை வழக்கமாக வைத்திருந்த அவருக்கு கோவாவில் சொந்தமாக வீடு இருந்தது. அந்த வீட்டில் சோழர் காலத்து கல், ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட கலைப் பொருட்களைச் சேகரித்து வந்தார்.
1960-க்கு பிறகு அவர் நிரந்தரமாக மெக்சிகோவில் தங்கிவிட்டார். அப்போது கோவாவில் இருந்த கலைப் பொருட்களையும் எடுத்து வந்துவிட்டார். 1974-ல் மெக்சிகோ தூதர் இறந்துவிட்டதால் கலைப் பொருட்கள் அவரது உறவினர் களுக்கு கைமாறியது. அவர்களிடம் இருந்துதான் 2008-ல் கல் நந்தி சிலையை விலைக்கு வாங்கி என்.ஜி.ஏ.வுக்கு விற்றேன்’ என்று தெரிவித்திருக்கிறார் ரோச்செல்.
எனினும் ‘இந்த சிலை குறித்த மூலப்பத்திரத்தில் சந்தேகம் இருப் பதால் விசாரணை நிலுவையில் உள்ளது’ என தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் க்ரீனன். இதனிடையே, கால்டன் ரோச்செல் தனது ‘ஆர்ட் கேலரி’யில் அதிகார நந்தி, சந்திரசேகர சிவன், ஜெயின் தீர்த்தங்கரர், சுகாசன சிவன், நடன சம்பந்தர் சிலைகள் தங்களிடம் விற்பனைக்கு இருப்பதாக 2012, 2014, 2016 காலகட்டத்தில் விளம்ப ரம் செய்திருக்கிறார். இவை அனைத்துமே 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ஐம்பொன் சிலைகள்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய ‘இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ அமைப்பின் எஸ்.விஜய் குமார், கூறியதாவது: “ரோச்செல் குறிப்பிடும் மெக்சிகோ தூதரின் பெயரையும் அவரது உறவினர் பெயரையும் என்.ஜி.ஏ. மறைக்கிறது. அவர்கள் யார் என்ற விவரத்தை இந்தியா கேட்டுப்பெற்று அதன் உண்மைத் தன்மையை விசாரிக்க வேண்டும்.
மேலும், இவ்வளவு காலம் இல்லாமல் இப்போது திடீரென ‘ரோச்செல்லின் ஆர்ட் கேலரி’க்கு இவ்வளவு நேர்த்தியான, அழகான சோழர் காலத்து சிலைகள் வந்தது எப்படி என்ற விவரத்தை விசாரித்து, அந்தச் சிலைகளை இங்கிருந்து கடத்தி விற்றவர்களையும் கைது செய்வதுடன் சிலைகளை மீட்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT