Published : 17 Mar 2017 10:56 AM
Last Updated : 17 Mar 2017 10:56 AM
தமிழகத்தில் பட்டமேற்படிப்பு, சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதால் மதுரை போன்ற மருத்துவ நகரங்களை தாண்டி தஞ்சாவூருக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை சென்றால் அந்த திட்டத்தின் நோக்கம் நிறைவடைய வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதே சிறந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் அமைக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை தஞ்சாவூரில் அமைக்க தமிழக அரசு ஆர்வம் காட்டி வருவதற்கு தென்மாவட்டங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதற்கான தொடக்கப்புள்ளியாக மதுரையில் நேற்று முன்தினம் 28 சிறு, குறு தொழிற்சங்கங்கள், மாணவர்கள், தொழில் முனைவோர்கள், பொதுமக்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த கட்டமாக திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் போராட்டத்தை முன்னெடுக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு துணையாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கைகோர்க்க தொடங்கியுள்ளனர்.
எய்ம்ஸ் மதுரையில் அமைய வேண்டிய அவசியம் பற்றியும், சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவிவரும் சூழ்நிலையில், மருத்துவ நகரங்களை தாண்டி தஞ்சாவூருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு சென்றால், அத்திட்டத்தின் நோக்கமே நிறைவடையாமல் போய்விடும் என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது:
எய்ம்ஸ் மருத்து வமனை மதுரையில் அமைந்தால் இங்கு 12 சிறப்பு மருத்துவ சிகிச்சைத்துறைகள் வர வாய்ப்புள்ளது. அதில் 100 சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள், 150 பிற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியார்கள் உட்பட 2 ஆயிரம் பேர் பணிபுரிவார்கள். சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (எம்எம்சி) மேலான மருத்துவ வசதிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் வசிப்பதற்கான வீடுகள், அவர்களின் குழந்தைகளுக்கான பள்ளி, வணிக வளாகம், பொழுதுபோக்கு அம்சங்கள் என ஒரு மெட்ரோ சிட்டியில் உள்ள வசதிகள் உருவாக்கப்படும். அதற்கு குறைந்தபட்சம் 200 ஏக்கர் முதல் 300 ஏக்கர் வரை தேவைப்படும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம், நான்குவழிச்சாலை போக்குவரத்து, விமான நிலையம், போதுமான நீராதாரம் உள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும். அதற்கான நிதி, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். அவசர நிதி தேவைக்கு கோப்புகள் அனுப்பி அனுமதிக்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்படும் நிதியை உடனுக்குடன் ஒதுக்கி மருத்துவ வசதிகள் தடையில்லாமல் சர்வதேச தரத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது.
மருத்துவர்கள் பற்றாக்குறை
தற்போது தமிழகத்தில் மொத்தமே 850 சிறப்பு பட்டமேற்படிப்பு (டிஎம், எம்சிஎச்) மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் 350 பேர் ஏற்கெனவே மாநில அரசு பணிகளில் உள்ளனர். மீதமுள்ள 500 பேர் தனியார் மருத்துவமனை பணிகளில் உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், மற்ற தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிய முடியாது. முழுக்க முழுக்க தங்களது மருத்துவப் பணியை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மட்டுமே செலவிட வேண்டும்.
அதனால், பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் மிகப்பெரிய பொருளாதார வசதியுடன், சென்னை, மதுரை, கோவை போன்ற மருத்துவ நகரங்கள் மற்றும் பிற மாநிலங்களில் பணிபுரியும் சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் தஞ்சாவூர் போன்ற சிறுநகரில் எய்ம்ஸ் அமைந்தால் அங்கு செல்ல வாய்ப்பில்லை. மாநில அரசு பணிகளில் இருப்பவர்கள், தனியார் மருத்துவப்பணிகளுக்கு செல்வதால் அவர்கள் வருவது சிரமம். தமிழகத்தில் சிறப்பு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் ஏற்கெனவே பற்றாக்குறையாக உள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 50 சதவீதம் சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. அதுபோல, கடந்த 3 ஆண்டுளுக்கு முன்பே திருச்சியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் பற்றாக்குறையால் இன்னும் தொடங்கப்படவில்லை.
தற்போது மதுரை, திருநெல்வேலி, கோவை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மேலும் 4 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டு கட்டுமானப் பணி நடக்கிறது. ஏற்கெனவே தொடங்கிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுக்கே மருத்துவர்கள் கிடைக்காத நிலையில் புதிதாக தொடங்கப்படும் இந்த 4 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைப்பது மிகவும் சிரமம். இதில் மதுரை, கோவை முக்கிய மருத்துவ நகரங்கள் என்பதால் இங்கு ஓரளவு சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருநெல்வேலி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுக்கு சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் கிடைப்பது பெரும் சிரமம்.
இந்நிலையில் தஞ்சாவூரில் எய்ம்ஸ் போன்ற மிகப்பெரிய மருத்துவமனையை கொண்டு செல்வதால் அங்கு பட்டமேற்படிப்பு, சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் எந்த அளவுக்கு பணிபுரிய ஆர்வம் காட்டுவார்கள் என்பது தெரியவில்லை.
பொதுவாக சென்னை, கோவை, மதுரை போன்ற மருத்துவ நகரங்களில் பணிபுரிவதையே மருத்துவர்கள் விரும்புவார்கள். அவர்கள், தஞ்சாவூர் போன்ற சிறு நகரங்களுக்கு செல்ல விரும்ப மாட்டார்கள். அதனால், எய்ம்ஸ் போன்ற பெரிய திட்டம், தஞ்சாவூருக்கு சென்றால் அந்த திட்டத்தின் நோக்கமே தோல்வியடைய வாய்ப்புள்ளது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களிலேயே தங்களுக்கு விருப்பமில்லாமல் ஒரு இடத்துக்கு இடமாறுதல் செய்தால், அவர்கள் உடனடியாக டெபுடேஷனில் (இடமாறுதல்) மீண்டும் அதே இடத்தில் பணிபுரிய வந்துவிடுவார்கள். அதனால், தமிழக அரசு மருத்துவமனைகளில் 150 ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இந்நிலையில், தஞ்சாவூரில் எய்ம்ஸ் அமைந்தால், அங்கு போதிய மருத்துவர்கள் கிடைக்காமல் பயிற்சி மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கக்கூடிய நிலை ஏற்படும். அதன் காரணமாக தரமான சிகிச்சை கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.
எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதன் நோக்கம் நிறைவேறும் வகையில், தென்தமிழகத்தின் நுழைவு வாயிலாக உள்ள மதுரையில் அமைப்பதே சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
செந்தில்.
எய்ம்ஸில் ஏழை எளியவர்களுக்கு இலவசம் வசதிப்படைத்தவர்களுக்கு குறைந்த கட்டணம்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வரும், எய்ம்ஸ் மருத்துமவனைக்கான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வி.எஸ். மணிமாறன் கூறியது:
தற்போது புதுடெல்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற ஒரு ஆண்டுக்கான கட்டணமாக வெறும் 10 ரூபாய் மட்டுமே பெறப்படுகிறது. ஏழை உள்நோயாளிகள் ஒரு முறை நுழைவுக் கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும். ஒரு நாள் பெட் வாடகை 35 ரூபாய். 10 நாளைக்கு தங்குவதாக இருந்தால் 350 ரூபாய் கட்ட வேண்டும். வசதியுள்ளவர்கள், ஏ கிளாஸ், பி கிளாஸ் சிகிச்சை பிரிவில் ஏசி வசதியுடன் உள்நோயாளியாக சிகிச்சை பெறலாம்.
இந்த சிகிச்சை வார்டுகளை பிரைவேட் வார்டுகள் என அழைக்கின்றனர். பி கிளாஸ் அறைக்கு நாளொன்றுக்கு ரூ.2 ஆயிரமும், ஏ கிளாஸ் அறைக்கு ரூ.3 ஆயிரமும் கட்டணமாக பெறப்படுகிறது. சாதாரண வார்டுகளில் சாப்பாடு இலவசமாகவும், ஏ, பி கிளாஸ் வார்டுகளில் சாப்பாட்டுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. நோயாளியுடன் தங்குவோருக்கு ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்காக ரூ.300 தனியாக பெறப்படுகிறது.
சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் இதய சிகிச்சை பெறுகின்றனர். இதில், 4,600 பேர் இதய அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர். பிரைவேட் வார்டில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 50 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. இந்த சிகிச்சை ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் செலவாகும்.
இதுபோல அனைத்து அறுவை சிகிச்சைகளும் ஏழை நோயாளிளுளுக்கு இலவசமாகவும், ஏ மற்றும் பி பிரிவுகளில் குறைந்த கட்டணத்திலும் உயர்தர சிகிச்சைகள் பெறலாம். ஸ்கேன் செய்வதற்கு குறைந்தபட்சமாக ரூ.250-ம், அதிகபட்சமாக ரூ.1,200-ம் பெறப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT