Published : 14 Feb 2014 08:14 PM
Last Updated : 14 Feb 2014 08:14 PM

பயிர் நோய்களுக்கு தீர்வு காண குறுந்தகடு

பயிர்களை தாக்கும் நோய்களை காக்க விவசாயிகளுக்கு உதவும் வகையில், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் குறுந்தகடு தயாரித்துள்ளனர்.

இக்கல்லூரி என்.எஸ்.எஸ். அலுவலர்கள் ஆர். ரஞ்சித், எஸ். செல்வகுமார் ஆகிய இரு விரிவுரையாளர்கள் மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் கடந்த ஆண்டு, ஆழ்வார்குறிச்சி பகுதியிலுள்ள, 750 வீடுகளுக்கு நேரடியாக சென்று காய்கறி பயிர்களுக்கான விதைகளை அளித்தனர்.

வீடுகளில் தோட்டம்

ஒவ்வொரு வீட்டிலும் காய்கறி தோட்டங்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு கைமேல் பலன் கிடைத்தது. பெரும்பாலான வீடுகளில் காய்கறித் தோட்டங்கள் உருவாயின. இந்த தோட்டங்களில் அதிகளவில் காய்கறிகளை உற்பத்தி செய்த குடும்பங்களுக்கு, கல்லூரி சார்பில் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இக்கிராம மக்களிடம் கிடைத்த வரவேற்பை அடுத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்களை தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் வழிகள், நோய் தாக்குதல்களில் இருந்து பயிர்களை காக்கும் வழிமுறைகள், கையாள வேண்டிய வழிமுறைகள், மருந்துகள் குறித்த அனைத்து விபரங்களையும் அடங்கிய குறுந்தகடை, இக்கல்லூரியை சேர்ந்த ஏ.செல்வசுப்பிரமணியன், எம். மாரிமுத்து, பி. பாபு, எஸ். சதீஷ் கிருஷ்ணன், எப். முகமது இட்ரூஸ் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

நோய்களுக்கு தீர்வு

“குறுந்தகட்டில் உள்ள விபரங்கள் அனைத்தும் அரசு இணையதளத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அத்தகைய இணையதளங்களை ஊரகப் பகுதி விவசாயிகள் பார்க்க வசதியில்லை. இதனால், அந்த விபரங்களை குறுந்தகட்டில் தனியாக தயாரித்திருக்கிறோம்” என்று ரஞ்சித் கூறினார்.

“குறுந்தகட்டில் பாதிக்கப்பட்ட பயிர்களின் புகைப்படங்களை பார்த்து, விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் நோய் தாக்குதல் உள்ளதா? என்பதை ஒப்பிட்டு பார்க்க முடியும். வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரைக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகள் குறித்த விபரங்கள் இதில் இடம்பெற்றுள்ளது” என்று செல்வகுமார் கூறினார்.

திருநெல்வேலி மாவட்டம், சிவசைலம் கிராமத்தில் இக்கல்லூரி சார்பில் நடைபெற்ற என்.எஸ்.எஸ். முகாமில், விவசாயிகளுக்கு இந்த குறுந்தகடுகள் விநியோகம் செய்யப்பட்டன. அடுத்தகட்டமாக இயற்கை உரங்கள் தயாரிப்பு, அதன்மூலம் காய்கறிகள், பயிர்கள் உற்பத்தி குறித்த தகவல்கள் அடங்கிய குறுந்தகடு தயாரிக்க இக் கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x