Published : 06 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jan 2014 12:00 AM
“தந்தை சொல் தட்டாத அண்ணன் அழகிரிக்காக நாங்களும் வன வாசம் செல்லத் தயார்’’ என அறிவித்திருக்கிறார்கள் அழகிரி விசுவாசிகள்.
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. வை கூண்டோடு கலைத்துவிட்டதாக கடந்த சனிக்கிழமை அறிவித் தார் தி.மு.க. பொதுச் செய லாளர் அன்பழகன். இந்த நட வடிக்கையால், அழகிரியின் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப் பட்டிருக்கிறார்கள். மாறாக ஸ்டாலின் ஆதரவாளரான தளபதி தலைமையில் ஏழு பேர் கொண்ட பொறுப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருமே ஸ்டாலின் விசுவாசிகள்தான்.
கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையால் அழகிரி வட்டா ராம் அப்செட்டில் இருக்கிறது. அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆதரவாளர்கள் கேட்டதற்கு, ‘பொறுமையாக இருங்கள். 9-ம் தேதி மதுரை வந்ததும் பேசிக்கொள்ளலாம்’என்று மட்டும் சொல்லி இருக்கிறாராம் அழகிரி. அதற்குள்ளாக, அ.தி.மு.க. அல்லது காங்கிரஸுடன் அழகிரி கைகோர்க்கப் போகிறார் என்று மதுரைப் பக்கம் வதந்திகள் வட்டமடிக்க ஆரம்பித்துவிட்டன.
வனவாசம் செல்லத் தயார்
அழகிரி ஆதரவாளர்களின் தற்போதைய நிலைகுறித்து அழகிரி விசுவாசியும் கலைக்கப் பட்ட மாநகர் மாவட்ட தி.மு.க. பொருளாளருமான மிசா பாண்டியன் ’தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில், “இருபது வருடங்களுக்கு முன்பு ம.தி.மு.க. பிளவு ஏற்பட்டபோது தென் மாவட்ட தி.மு.க.வுக்கு எத்தகைய சோதனை வந்ததோ அதைப்போல இதுவும் எங்களுக்கு ஒரு சோதனை. அழகிரியுடன் இருப்பவர்கள் பதவி இல்லாவிட்டால் ஓடிவிடுவார்கள் என்ற சொல்லை பொய்யாக்கிக் காட்ட எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. பரதனை அரியணை ஏற்ற வேண்டும் என்பதற்காக ராமனை வனவாசம் அனுப்பினார்கள். ராமனோடு லெட்சுமணனையும் காட்டுக்குப் போகச் சொல்லவில்லை. ஆனால், அண்ணனுக்கு துணையாக தம்பி லெட்சுமணனும் காட்டுக்குப் போனான். அதுபோல அண்ணன் அழகிரிக்காக நாங்களும் வனவாசம் செல்லத் தயாராகி விட்டோம்” என்று சொன்னார்.
மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்ட அழகிரி விசுவாசிகள், “கீழ்மட்ட தொண்டனை நெருங்காமல் மேல்மட்டத் தலைவர்களையும் வந்தேறிகளையும் வைத்துக் கொண்டு கட்சி நடத்துகிறார் ஸ்டாலின். வைகோ தொடங்கி பரிதி வரை கட்சிக்காக உழைத்த பலர், கட்சியை விட்டுப் போனதற்கு யார் காரணம்? தலைவருக்கு பின்னால் தகுதியான நபரின் தலைமையில் கட்சி வழிநடத்தப்பட வேண்டும் என்பதுதான் அழகிரியின் கவலை.
தென் மண்டல தி.மு.க. செயலாளராக இருக்கும் அழகிரி, தென் மண்டல தி.மு.க. கூட்டத்தை கூட்டவேண்டும். அதேசமயம் அவர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் தென் மண்டலத்தில் உள்ள பத்து தொகுதிகளையும் வென்றெடுப்பதற்கான வேலை களை தொடங்க வேண்டும். தனக்குக் கட்டுப்படாத மாவட்டச் செயலாளர்கள் மீது தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிச் செய்வதற்காக தலைமை அவர் மீது கோபப்பட்டால் அவரும் பதிலுக்கு தனது பலத்தைக் காட்டலாம். அதை விட்டுவிட்டு சும்மா அறிக்கை போர் நடத்தி தன்னையும் கஷ்டப்படுத்திக் கொண்டு சுற்றி இருப்பவர்களையும் கஷ்டத்துக்கு உள்ளாக்கக்கூடாது’’ என்று அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT