Published : 30 Mar 2017 08:32 AM
Last Updated : 30 Mar 2017 08:32 AM
தொடர் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 16 தினங்களாக நூதன அறப்போராட்டங்கள் மூலம் ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர் திருச்சியைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள்.
திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் பி.அய்யாக்கண்ணு(72). வழக்கறிஞரான இவருக்கு மனைவி சந்திரலேகா, துணைவி ரேவதி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி சந்திரலேகா, 2 மகன்கள், மருமகள்கள் அனைவருமே வழக்கறிஞர்கள். இவருக்குச் சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது.
இவர் 1977-ல் காங்கிரஸ் கட்சி சார்பில் முசிறி தொகுதியில் எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அதன் பிறகு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். அக்கட்சி பல பிரிவுகளாக பிளவுபட்டதும் தேசிய விவசாயிகள் சங்கம் என்ற சங்கத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் பாரதிய கிசான் சங்கத்தில் மாநில பொதுச் செயலாளர், மாநில துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருந்து, விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், மத்திய அரசை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என பாரதிய கிசான் சங்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதிலிருந்து விலகி, 2015-ம் ஆண்டில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கி அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
ஏற்கெனவே திருச்சி மற்றும் சென்னையில் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு நூதன போராட்டங்கள் மூலம் தன்னை தனித்து அடையாளப்படுத்திக் காட்டியவர் அய்யாக்கண்ணு.
விவசாயியின் நிலையை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் கழுத்தில் மனித மண்டை ஓடுகளைத் தொங்கவிட்டும், கைகளில் மண் சட்டிகளை ஏந்தியும், அரை நிர்வாண கோலத்திலும், விவசாயியை சடலமாகக் கிடத்தியும், மொட்டை அடித்துக்கொண்டும், பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்தும், எலிக்கறி மற்றும் பாம்புக் கறி உண்ணுதல் என பல்வேறு நூதன போராட்டங்களை அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் டெல்லியில் நடத்தி வருகின்றனர்.
பல மாநில விவசாயிகள்
இந்தப் போராட்டத்துக்கு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகளும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவுடன் டெல்லி சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 4 பெண்களில் ஒருவரான திருச்சி நாகமங்கலத்தைச் சேர்ந்த வி.ராஜலட்சுமி(60) கூறும்போது, “எனக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. சோளம், கம்பு, நெல் பயிரிட்டு வந்தோம். ஆனால், தற்போது குடிப்பதற்கே தண்ணீர் இல்லை. சாகுபடி இல்லாததால் கடனைக் கட்ட முடியாமல் உள்ளோம். எனது சுயநலத்துக்காக இந்தப் போராட்டத்துக்கு வரவில்லை. கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவே வந்துள்ளேன்” என்றார்.
வேதனையளிக்கும் பேச்சு
“உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஆனால், இதை ஆட்சியாளர்கள் உணரவில்லை. ஒட்டுமொத்த விவசாயிகளுக்காக தன்னலம் கருதாது, தங்களை வருத்திக்கொண்டு என்னோடு விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். ஆனால், இங்கு வரும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலர், நாங்கள் ஒரு சில கட்சிகளின் தூண்டுதலின் பேரில்தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறுவது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. கடன் தள்ளுபடி குறித்து உறுதியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்” என்று உறுதியுடன் கூறினார் அய்யாக்கண்ணு.
போராட்டத்துக்கான காரணம்
விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்துக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் கர்நாடகா, கேரள மாநிலங்கள் அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க வேண்டும். நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்ற வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும் போன்றவை டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் முன்வைத்துள்ள முக்கியமான கோரிக்கைகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT