Published : 14 Feb 2017 10:28 AM
Last Updated : 14 Feb 2017 10:28 AM
ரூபெல்லா தடுப்பூசி மருந்தால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதனால், இந்த தடுப்பூசி போட தயங்க வேண்டாம் என இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்க மருத்துவக்குழுவினர் மதுரை மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ரூபெல்லா நோய், அம்மை நோய்களில் ஒரு வகைதான். இந்நோயால் இந்தியாவில் ஒரு லட்சம் முதல் 1.50 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் இறப்பதாக மருத்துவ ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதனால், இந்நோயை ஒழிக்க முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கோவா, லட்சத்தீவு ஆகிய 5 மாநிலங்களில் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி மருந்து அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் முதற்கட்டமாக பள்ளிகளிலும், இரண்டாம் கட்டமாக அங்கன்வாடி மையங்களிலும், மூன்றாம் கட்டமாக பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கும் தடுப் பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் 6 லட்சத்து 46 ஆயிரத்து 943 குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 2,168 பள்ளி களில் படிக்கும் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 285 குழந்தைகளுக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி மருந்து அளிக்கப்படும் குழந்தை கள், வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்படுவதாகவும், மரணம் அடைவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்படுகின்றன. பெற்றோர் அச்சமடைந்துள்ளதால் வதந்திகளால் அவர்கள் ஒப்புதல் பெற்ற பின்பே, தற்போது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
பெற்றோர் மறுக்கும்பட்சத்தில் தடுப்பூசி போடப்படுவதில்லை. அதனால், பள்ளிகளில் படிக்கும் ஏராளமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. இதனால், ரூபெல்லா நோயை தடுக்கும் அரசின் நோக்கம் நிறைவடையாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதைதடுக்க இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் நாகேந்திரன், மகாலிங்கம், காமராஜ், சம்பத், பாலசுப்பிரமணியம், அமானுல்லா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் தற்போது மதுரை மாவட்டத்தில் ரூபெல்லா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்த மருத்துவ குழுவினர் கூறியதாவது:
கர்ப்பிணிகளுக்கு ரூபெல்லா நோய் தாக்கம் ஏற்படும்போது கருவுக்கு பாதிப்புகள் ஏற்படும். இதனால், கர்ப்பப்பையில் இருக் கும் குழந்தையின் கண், காது, மூளை, கல்லீரல், இதயத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ரூபெல்லா தடுப்பூசி ஒன்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட் டதல்ல. கடந்த 1985-ம் ஆண்டில் இருந்தே இத்தடுப்பூசி உள்ளது. 30 ஆண்டுகளாக இந்த தடுப்பூசியால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. தற்போது கொஞ்சம் மேம்பட்ட வகையில் இந்த தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பின்பனி காலத்தில் எல்லா குழந்தை களுக்குமே மூக்கு ஒழுகல், சளி இருக்கத்தான் செய்யும். இந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. சிலருக்கு இந்த தடுப் பூசியால் வாந்தி ஏற்பட்டிருக்கலாம். வாந்தி ஏற்படுவது தடுப் பூசியால் வருவதில்லை. சில குழந்தைகள், மாத்திரை சாப்பிட்டால் வாந்தி எடுப்பார்கள்.
அதைப் போன்ற துதான் இதுவும். அதனால், பள்ளிக்கு அனுப்பப்படும் எல்லா குழந் தைகளுக்கும் ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ரூபெல்லா தடுப்பூசி போடாவிட்டால் என்னாகும்?
இதுகுறித்து மருத்துவர்கள் மேலும் கூறுகையில், போலியோவை தவிர மற்ற தடுப்பூசிகள் இதுவரை 100 சதவீதம் போடப்படவில்லை. ரூபெல்லா தடுப்பூசி போடவில்லையென்றால் வெளிநாடுகளில் இருந்து இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வரும்போது அவர்கள் மூலம் இந்நோய் பரவ வாய்ப்புள்ளது. இந்நோய் ஒருவருக்கு வந்தால் அவர்கள் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு பரவும். அதனால், பல வெளிநாடுகளில் ரூபெல்லா நோயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்நோயின் அறிகுறியை கண்டுபிடிப்பதற்கு முன்பே, இது மற்றவர்களுக்கு பரவிவிடும். எனவே, குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ ரூபெல்லா தடுப்பூசி மருந்தை அளிக்க பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT