Published : 11 Oct 2014 09:42 AM
Last Updated : 11 Oct 2014 09:42 AM

திமுக-வை பவானி சிங் விமர்சிப்பதா? - தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், திமுக-வை விமர்சித்திருப்பதற்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கட்சித் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதம்:

பெங்களூரில் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புவந்த பிறகு நான் எதுவும் கூறவில்லை என்று பேசப்படுவதாலும், அரசு வழக்கறிஞர் பவானி சிங் அளித்த பேட்டி ஒன்றில் தி.மு.க.வை குறை கூறியிருப்பதாலும், அவரைப் பற்றி சில கருத்துகளைத் தெரிவிக்கின்றேன்.

“நான் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டேன் என்று எப்படி சொல்ல முடியும்? சட்டம் தெரியாதவர்கள் வேண்டுமானால் எனது நிலைப்பாட்டை விமர்சிக்கலாம். நான் மனசாட்சியுடன் நடந்து கொண்டேன். இந்த வழக்கில் என்னை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கர்நாடக அரசு வக்கீலாக நியமித்தது முதல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக தி.மு.க.வினர் கூறினர். அதை தீர்ப்பின் மூலம் பொய்யாக்கினேன். இப்போதும் அதே விமர்சனம் வைக்கிறார்கள். இது சரியல்ல” என்றெல்லாம் பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதால், அவரது செயல்பாடுகள் குறித்து விளக்குகிறேன்.

தமிழகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை பெங்களூருக்கு மாற்ற திமுக பொதுச்செயலர் க.அன்பழகன் தொடுத்த வழக்கில் 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே.சேமா ஆகியோர் கொண்ட பெஞ்ச்தான், இந்த வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது.

அத்தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “புதிய அரசு வழக்கறிஞர்; குற்றவாளிகளான ஜெயலலிதா குழுவினரோடு இணைந்து செயல்படுவது நன்றாகத் தெரிகிறது. அதன் காரணமாக பொதுவாக நீதி கிடைக்காது என்ற ஒரு நம்பத்தகுந்த ஐயம் மக்கள் மனதிலே எழுந்துள்ளது. நீதி திசை திரும்பிச் செல்வது நிச்சயமாகத் தெரிகின்றது” என்று தெரிவித்திருந்தனர்.

மேலும், 313-வது விதிப்படி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்போது, ஜெயலலிதா நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகாமல் இருக்க, அவர்கள் சார்பாக தாக்கல் செய்த தவறான மனுவுக்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்பே தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வருந்தத்தக்கது.

ஜெயலலிதா நேரில் ஆஜராகாமல் இருக்க விசாரணை நீதிமன்றம் அனுமதி கொடுத்ததற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களுடைய கடுமையான எதிர்ப்பை இந்தத் தீர்ப்பிலே தெரிவித்திருப்பதோடு, “நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்த போதிலும், உங்களை விட சட்டம் பெரியது. நேரில் ஆஜராகாமல் இருக்க விதிவிலக்கு கொடுக்கக்கூடிய அளவுக்கு அவரது மனுவிலே காரணங்கள் கூறப்படவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நீதியின் பாதையிலே குறுக்கிட்ட செயல்தான் நடைபெற்றுள்ளது” என்று குறிப்பிட் டிருந்தனர்.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கினை அன்றாடம் விசாரிக்க வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்து அது வெளிவந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞர் பவானி சிங், அவ்வாறு வாதாடாமல் அரசு வழக்கையே குலைக்கும் வகையில், வழக்கின் புலன் விசாரணை அதிகாரியையே குற்றவாளிகள் தரப்புச் சாட்சியாக விசாரணை செய்ய அனுமதித்ததோடு, இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட தங்க மற்றும் வைர நகைகளை, வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராமலே, வழக்கின் இறுதி வாதத்தை முடிக்க ஆர்வம் காட்டினார்.

ஜெயலலிதா தரப்பினர் உச்ச நீதிமன்றம் வரை சென்று, தங்களுக்கு எதிராக வாதாட வேண்டிய பவானி சிங்கே அவ்வழக்கை தொடர வேண்டும் என கோரிப் பெற்றனர். 27-1-2014 அன்று நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு நேரில் ஆஜராகாமல் இருப்பதற்காக விலக்களிக்க வேண்டுமென்று கோரி, அவர்களுடைய வழக் கறிஞர்கள் மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அதில் ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருப்பதால் அரசுப் பணி இருப்பதாகவும், சசிகலாவுக்கு கண் வலி இருப்பதாகவும், சுதாகரனுக்கு மூட்டு வலி இருப்ப தாகவும், இளவரசிக்கு நீரிழிவு நோய் இருப்பதாக வும், அதனால் நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதற்கு ஆட்சேபணை தெரிவிக்க வேண்டிய எதிர் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் அவர்கள், எந்த விதமான ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. அவர் ஆட்சேபணை தெரிவிக்காத காரணத்தால், நீதிபதி அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.

அப்போதுகூட நீதிபதி, “நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்குக் கோரும் மனுவில் உரிய மருத்துவச் சான்றிதழ்கள் இணைக்கப்படவில்லை. இருப்பினும் இந்த முறை மட்டும் இம்மனுக்களை ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். இதுபோல் மேலும் சம்பவங்களைக் குறிப்பிடலாம். இப்படிப்பட்ட புகழ்களை உடைய பவானிசிங் திமுகவை குற்றம்சாட்டியுள்ளார்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x