Published : 20 Apr 2017 04:08 PM
Last Updated : 20 Apr 2017 04:08 PM
தனுஷ்கோடி அருகே திடீர் கடல் சீற்றத்தால் முகுந்தராயர் சத்திரம் மீனவ கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் அவதிப்பட்டனர்.
தனுஷ்கோடி அருகே வியாழக்கிழமை திடீர் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு முகுந்தராயர் சத்திரம் மீனவர் கிராமத்திற்குள் 25 மீட்டர் தூரம் வரையிலும் கடல் நீர் புகுந்தது. அங்கு தெற்கு கடலோரம் இருந்த கடைகளில் கடல் நீர் சூழ்ந்தது.
இதுகுறித்து தனுஷ்கோடி மீனவர்கள் கூறியதாவது, தனுஷ்கோடிக்கு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்களும் வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே, ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் வீசக்கூடிய சோழக் கச்சான் காற்றில் கடல் சீற்றம் மற்றும் ராட்சத அலைகள் ஏற்படுவதுண்டு. அப்போது இந்தப் பகுதி கடற்பகுதிகளில் அலையின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் இப்பகுதிகளில் உள்ள மீனவ குடிசைகள், கடைகள் கடல் நீர் புகுந்து விடும் கடல் அரிப்பும் அதிகமாகி வருகிறது.
1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கியப் புயலில் ராமேசுவரம் தீவில் தனுஷ்கோடி துறைமுகமே அழிந்து போனது. பின்னர் கடல் அரிப்பிலிருந்து தனுஷ்கோடியை தடுப்புச் சுவர்கள் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
தனுஷ்கோடி முழுவதும் தடுப்புச் சுவர்கள் அமைக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.
கடலரிப்பைக் குறைக்க கடலோரத்தில் நடைபெறும் மணற்கொள்ளையைத் தடுத்து, அலையாத்திக் காடுகளை உருவாக்கி, பவளப்பாறைகளை பாதுகாத்தாலே பெருமளவில் கடலரிப்பு இயற்கையாகவே தடுக்க முடியும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT