Published : 17 Jul 2016 02:34 PM
Last Updated : 17 Jul 2016 02:34 PM
ஒருவர் தனது கல்வி, வேலை, சோகம், மகிழ்ச்சி போன்ற நிகழ்வுகளை மற்றவர்களிடம் பகிர்வதற்கு, கால் நூற்றாண்டுக்கு முன் வரை தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் தபால்துறை முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது.
கூரியர் சேவை, செல்போன், இமெயில், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட நவீன வசதிகள் வந்தபின், தபால் சேவை பயன்பாடு குறைந்துவிட்டது. தபால்துறையில் ஊழியர் பற்றாக்குறையால் அவர் களும் சில நேரங்களில் கடிதங் களை உரியவரிடம் சென்று சேர்ப்பதில் தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் என்றாலும் கடிதப் போக்கு வரத்துக்கு தற்போது கூரியர் சேவையை நாடுகின்றனர்.
சர்வதேச அளவில் அதிகப் படியான தபால் நிலையங் களையும், தபால் பெட்டிகளையும் கொண்ட நாடு இந்தியா. நாடு முழுவதும் 1.50 லட்சத்தும் மேற்பட்ட தபால் நிலையங்கள் உள்ளன. ஒரு தபால் நிலையத்துக்கு தபால்களை சேகரிக்க 3 முதல் அதிகபட்சம் 20 தபால்பெட்டிகள் வரை வைக்கப் பட்டுள்ளன. கிராமப் புறங்களில் தினமும் ஒரு நேரம் மட்டுமே இந்த தபால் பெட்டிகள் திறக்கப்படும்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களில் இரண்டு, மூன்று முறை தபால்களை சேகரிக்க தபால்பெட்டிகள் திறக்கப்படுகின்றன. தற்போது தபால் பெட்டிகள் பராமரிப்பு, கண்காணிப்பில் தபால்துறை போதிய கண்காணிப்பு, அக்கறை காட்டவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், பெருநகரங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை பூட்டு இல்லாமல் தபால் பெட்டிகள் பல இடங்களில் திறந்தே கிடக்கின்றன. அவை பராமரிப்பு இல்லாமல் துருப்பிடித்தும் காணப்படுகிறது. அதனால், கடிதங்கள் போட வரும் பொதுமக்களிடம் அவை திருடு போகுமோ அச்சமும், தபால் பெட்டிகள் மீது நம்பிக்கையின் மையையும் ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து தேசிய விருது பெற்ற முன்னாள் தபால் அலுவலர் ஹரிஹரன் கூறியது: நகர்ப்புறங்களில் தபால் ஆய்வாளர், மக்கள் தொடர்பு அலுவலர் தபால் பெட்டிகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும். கிராமங்களில் மேற்பார்வையாளர் ஒருவர் கண்காணிக்க வேண்டும். இவர்கள், தபால் பெட்டிகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளதா, உரிய நேரத்தில் திறக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
சில நேரங்களில் தபால் சேகரிக்க வருவோரை கண்காணிக்க தபால் பெட்டிகளில் யாருக்கும் தெரியாமல் வந்து சோதனைக் கடிதம் போடுவார்கள். அந்த கடிதம், அடுத்த நாள் அந்த அதிகாரிக்கே வந்து சேர வேண்டும். வரவில்லை என்றாலோ, அதற்கு அடுத்த நாட்களிலும் அந்த கடிதம் வரவில்லையென்றாலோ அந்த கடிதம் எடுக்கப்படவில்லை, தபால் பெட்டி சரியாக திறக்கப்பட வில்லை என்பது தெரியவரும். இதையடுத்து, தபால் பெட்டி பராமரிக்கும் ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பார்கள். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயிண்ட் அடிக்க வேண்டும். பூட்டு இல்லாத தபால்பெட்டிகளுக்கு பூட்டு போட வேண்டும். பிரிட்டீஷார் ஆட்சிவரை தபால் பெட்டிகளை சுத்தம் செய்ய நிரந்தரமாகவே அதனுள் துணி ஒன்றை வைத்திருப்பார்கள். தபால் சேகரிக்க வருவோர் தினமும் தபால்களை எடுத்துவிட்டு அந்த தபால் பெட்டியை துணியைக் கொண்டு துடைப்பார்கள். இது போன்ற நடைமுறைகள் தற்போது பின்பற்றப்படுகிறதா என்பது தெரியவில்லை என்றார்.
தபால்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தபால் பெட்டிகள் திறந்திருப்பது அதில் போடப்படும் தபால்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான். தபால் பெட்டிகளுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு வராமல் இருந்திருக்கலாம். வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT