Last Updated : 09 Oct, 2013 10:01 AM

 

Published : 09 Oct 2013 10:01 AM
Last Updated : 09 Oct 2013 10:01 AM

பா.ம.க.வின் புரியாத புதிர் - ஜாதி அமைப்புகளுடன் இணைந்து 4-வது அணிக்கான முயற்சி!

மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஜாதிய அமைப்புகளின் ஆதரவுடன் 4-வது அணிக்கான முயற்சியில் பா.ம.க. களம் இறங்கியுள்ளது.

அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணி, தி.மு.க. தலைமையில் ஓர் அணி என்று இரு திராவிடக் கட்சிகளை சுற்றியே நடக்கும் தமிழக அரசியல் அணிவகுப்பில், பாரதிய ஜனதா தலைமையில் மற்றோர் அணி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் மக்களவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு ஜாதிய அமைப்புகளின் ஆதரவுடன் 4-வது அணிக்கான முயற்சியில் பா.ம.க. களம் இறங்கியுள்ளது.

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தமிழகத்தில் பாஜக தலைமையிலான மாற்று (3-வது) அணியில் சேருவதில் ஆர்வமாக இருக்கிறார். இலங்கைத் தமிழர் சிக்கலுக்கு பாஜக அரசு தீர்வுகாண முன்வரும் என்று அவர் நம்புகிறார். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி என்ற தகுதியை குறுகிய காலத்திலேயே பெற்றிருக்கும் நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்குத் திராவிடக் கழகமும் இந்த அணியில் இணையலாம்.

நான்காவது அணி

இவற்றுடன் நான்காவது அணியாக களமிறங்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான அனைத்து சமுதாயப் பேரியக்கம்.

இன்று தமிழக அரசியலில் வெற்றிபெறத் துடிக்கும் எல்லா ஜாதிகளும் பாட்டாளி மக்கள் கட்சி ஈட்டிய வெற்றியை முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள். ஆனால் பாமக உருவான காலகட்டம், அதற்கு பின்னணியில் இருந்த அரசியல் தேவை, இட ஒதுக்கீடு கோரிக்கை ஆகியவற்றை இந்த சாதித் தலைவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. தமிழகத்தில் 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் எல்லா திசைகளில் இருந்தும் அரசியல் கட்சிகள் என்ற பெயரில் கிளம்பிய ஜாதி அமைப்புகள் பெரும் தோல்வியைச் சந்தித்தன. அவர்களின் பலத்தை அதிகமாக மதிப்பிட்டு, அவர்கள் வலியுறுத்திக் கேட்ட தொகுதிகளை விட்டுக் கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகமும் பதவியில் இருந்து இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

யாதவ இன மக்களை முன்னிறுத்தி மக்கள் தமிழ்த் தேசம் கட்சியைத் தொடங்கிய முன்னாள் அமைச்சர் இராஜ கண்ணப்பன், கட்சியைக் கலைத்து விட்டு, திமுகவில் சேர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராகி, மீண்டும் அதிமுகவுக்கே போய்ச் சேர்ந்தார். வ.உ.சிதம்பரம் பிள்ளையையும் இன்ன பிற வெள்ளாள, முதலியார் சமூகத்தில் பிறந்த தலைவர்களையும் காட்டி, புதிய நீதிக் கட்சியை நிறுவிய ஏ.சி. சண்முகம் சில காலம் அமைதியாக இருந்துவிட்டு, தனது கல்வி நிலையங்களைக் கவனிக்கப் போய்விட்டார். இப்போதும் அவ்வப்போது தனது இருப்பை மாலை பத்திரிகைகளின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். முத்தரையர்களின் பாதுகாவலனாய் தன்னை அடையாளப்படுத்தி தமிழர் பூமி கட்சியைத் தொடங்கிய கு.ப.கிருஷ்ணனும் தாய்க்கழகமான அதிமுகவிலேயே அடைக்கலமாகி விட்டார்.

ஆனால் 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமார்த்தியமாகக் காய்களை நகர்த்திய ராமதாஸ், அதிமுக கூட்டணியில் சேர்ந்து சட்டப்பேரவையில் தன்னுடைய எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

தலித் எதிர்ப்பு கோஷம்

தி.மு.க.வுடன் தேர்தலைச் சந்தித்த தலைவர்களோடு ஒப்பிட்டு நோக்குகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் பின்னால் தற்போது அணி வகுத்திருக்கும் தலைவர்களின் பலமும் செல்வாக்கும் ஊர் அறிந்ததே. தலித் எதிர்ப்பு என்ற மையப்புள்ளியே இந்த அனைத்து சமுதாயப் பேரியக்கத்தினரை இணைத்திருக்கிறதே தவிர, உறுதியான அரசியல் கொள்கைகள் எதையும் இத் தலைவர்களால் முன்வைக்க முடியவில்லை.

சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற இப்பேரியக்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்ட 45 ஜாதி மற்றும் அரசியல் கட்சிகள் என்ற போர்வையில் இயங்கும் சமூக அமைப்புகளும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று ஒருமித்தக் குரலில் கருத்து தெரிவித்தார்கள். தங்கள் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் தலித் இளைஞர்களால் குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தப்படுகிறார்கள். பெண்ணின் பெற்றோரிடம் பணம் பறிப்பதற்காகவே இக்காதல் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன என்பது இத் தலைவர்களின் குற்றச்சாட்டு. பா.ம.க.வை நிழலாகத் தொடர்ந்து தங்களை அரசியலில் நிலைநிறுத்திக்கொள்ள இந்தத் தலைவர்கள் முனைகிறார்கள். இதே மாதிரியான முடிவை ராமதாசும் எடுப்பார் என்று அத்தலைவர்கள் கூறுகிறார்கள்.

அவர்கள் ஆசைப்படுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இந்த அமைப்பினை சுமந்து கொண்டு அரசியலில் மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்று ராமதாஸ் நம்புகிறாரா என்பதே அடிப்படைக் கேள்வி. மரக்காணம் வன்முறைக்குப் பிறகு, சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் ராமதாஸும் அவரது கட்சியினரும். இதற்கு உடல் ரீதியாக அவர் கொடுத்த விலை அதிகம். ஆனால் அந்த நேரத்தில் அவருடன் தற்போது கைகோர்த்துள்ள சமுதாயப் பேரியக்கத் தலைவர்கள் தமிழகத்தில் எத்தனைக் கூட்டங்களைப் போட்டார்கள்? அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டார்களா? இக் கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லை. மேலும் தேர்தல் நெருங்க நெருங்க அ.தி.மு.க. பக்கமோ, தி.மு.க. பக்கமோ இத் தலைவர்கள் போய்விட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

வன்னியர் இயக்கத்தை ஆரம்பித்து பல ஆண்டுகள் தொடர்ந்து போராடி, 21 உயிர்களைப் பலி கொடுத்து, மிகவும் பிற்பட்ட சமூகத்தினருக்கு தனியாக இட ஒதுக்கீடு பெற்று தந்த பின் அரசியல் கட்சியைத் தொடங்கியவர் ராமதாஸ். 1998-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி, 1999-ல் பாஜக-திமுக கூட்டணி, 2004-ல் திமுக-காங்கிரஸ் அணி என சாதுர்யமாக காற்று வீசும் திசை அறிந்து பாய்மரத்தை செலுத்திய ராமதாஸுக்கு முதல் அடியாக விழுந்தது 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல். அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் அதிமுக அணியில் சேர்ந்தார். போட்டியிட்ட இடங்கள் அனைத்திலும் தோல்வி.

2011-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பக்கம் தாவினார். அதிலும் பலத்த அடி. அரசியலில் வெற்றியும் தோல்வியும் தவிர்க்க முடியாதவை. ஆனால் குறுகிய அரசியலை முன்னிறுத்தி கட்சி நடத்துபவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றாக வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்படுகிறார்கள். தோல்வி வரும்போது குறுகிய அரசியல் கொள்கையின் பின் நிற்பவர்கள் அதில் இருந்து ஓடிவிடவே பார்ப்பார்கள். ராமதாஸை பொறுத்தவரை, தொடக்கத்தில் ஜாதி அமைப்பை நடத்தினாலும், கட்சி தொடங்கிய பிறகு, அதன் நோக்கத்தை விரிவாக்கினார். தமிழர், ஈழத் தமிழர், அவர் தம் மொழி, இசை என எல்லா பிரச்சினைகளிலும் முன் நின்றார். வட மாவட்டங்களில் தலித்துகளுக்கும் இடைநிலைச் சமூகத்தினருக்கும் அவர் ஏற்படுத்திய பாலம் உறுதியானது. தென் மாவட்டங்களில் கலவரங்கள் வெடித்தபோது, வட மாவட்டங்கள் அமைதி காத்தன. ஆனால் தற்போது பின்னோக்கி பயணிக்க அவர் நினைக்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது. மைய நீரோட்டத்தில் இணைந்து நீந்திக் கரையேறியவர், சிறிய ஓடையில் நீச்சலடிக்க முயல்வது புரியாத புதிராகவே இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x