Published : 20 Aug 2016 01:47 PM
Last Updated : 20 Aug 2016 01:47 PM
பாளையங்கோட்டையில் எவ்வித அடிப்படைத் தகவலும் இல்லாமல், வெறும் காட்சி பொருளாக ஒண்டிவீரன் மணி மண்டபம் அமைந்துள்ளது குறித்து, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் எதிரே ஒண்டிவீரன் மணிமண்டபம் அமைந்துள்ளது. மண்டபத் தினுள், குதிரைமீது அமர்ந்தவாறு ஒண்டிவீரன் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலைக்கு ரூ.15 லட்சம், மண்டபத்துக்கு ரூ.49 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 1-ம் தேதி இந்த மணிமண்டபத்தை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
அடிப்படை வசதிகள்
மணிமண்டபத்தில் தியாகி ஒண்டிவீரன் குறித்த எவ்வித வரலாற்றுத் தகவல்களும் இல்லை என்று பல்வேறு அமைப்புகளும் புகார் தெரிவிக்கின்றன. இந்த மணிமண்டபம் அமைக்க தொடக்கத்தில் 725.56 சதுர மீட்டர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் 170.90 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டுமே மண்டபம் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளையும் பாதுகாத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுவந்தது. ஆனால் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை.
வரலாற்று தகவல் இல்லை
தியாகி ஒண்டிவீரனின் சிலையைத் தவிர, அவரது வரலாற்றை தெரிந்துகொள்ள எவ்வித தகவல்களும் மணிமண்டபத்தில் இல்லாதது குறித்து, ஏமாற்றம் அடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட தலைவர் இரா.நாறும்பூநாதன் கூறியதாவது:
``ஒண்டிவீரனின் நினைவு மண்டபத்தில் அவரைப் பற்றிய எந்தவித அடிப்படைத் தகவல்களும் இல்லாத நிலை அதிர்ச்சி அளிக்கிறது. மண்டபத்தின் வெளியே அவரது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதே தவிர, வேறு எந்த தகவலும் இல்லை. பொதுவான சுற்றுலா பிரயாணிகள் இங்கே வந்தால் அவர் குறித்து எதுவும் தெரிந்து கொள்ள இயலாது. அவர் குதிரையில் இருக்கும் சிலை மட்டுமே இருக்கிறது.
ஒண்டி வீரன் பற்றிய தகவல்கள், 1755-ல் நடைபெற்ற வெள்ளையருக்கு எதிரான போர் பற்றிய விபரங்கள் பொறிக்கப்பட வேண்டும். பெயர்ப்பலகையில் விளக்கமாக இருக்க வேண்டும். வெறுமனே மணிமண்டபம் என்பது எந்த வகையிலும் பயனில்லை. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT