Published : 29 Aug 2016 08:57 AM
Last Updated : 29 Aug 2016 08:57 AM
குற்றவாளிகள் கண்காணிப்பு கேமரா மூலம் அதிகமாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். சென்னையில் சுமார் 15 சதவீத வழக்குகள் கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலங்குவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை அடையாளம் காண்பது போலீஸாருக்கு சவாலாக இருந்தது. குறிப்பாக, கொலை குற்றவாளிகளின் அரிவாள் வீச்சு, கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதம், கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளி பீரோ உடைத்தால், ஜன்னல் கம்பியை நெழித்து திருடினால், கதவை உடைத்து கொள்ளையடித்தால் யார் என்பதை அவர்கள் கடைபிடிக்கும் நுட்ப முறையை வைத்து போலீஸார் துப்பு துலக்கினர்.
செல்போன் பிரபலமான பின் குற்றவாளியை அடையாளம் காணும் பணி போலீஸாருக்கு எளிமையானது. குற்றவாளி இருக்கும் இடத்தை செல்போன் டவர் மூலம் கண்டுபிடித்து கைது செய்தனர். தற்போது, போலீஸாருக்கு கை கொடுக்கும் கருவியாக கண்காணிப்பு கேமரா (சிசிடிவி ) உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் சென்னை எம்.எம்.டி.ஏ. காலனி அருகே இளைஞர் படுகொலை, பெருங்குடி மற்றும் மதுரவாயலில் வங்கிகளில் கொள்ளையடித்த வட மாநில இளைஞர்களைக் காட்டிக்கொடுத்ததும் கண்காணிப்பு கேமராதான்.
ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் திருடிச் செல்லப்பட்ட குழந்தையை மீட்டது, மதுரவாயலில் அடகுக் கடை அதிபர் கொலை, செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளிச் சிறுவன் கடத்தல், திருமங்கலம் முதியவர் கொலை, அசோக் நகரில் ஆடிட்டர் வீட்டில் கொள்ளை என பல வழக்குகளில் கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
துப்பு துலக்குவது எப்படி?
இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கொலை, கொள்ளை புகார் வந்த அடுத்த விநாடியே நாங்கள் குற்றம் நடந்த இடத்துக்குச் சென்று அங்கு ஏதாவது கண்காணிப்பு கேமரா உள்ளதா? அப்படி கேமரா இருந்தால் அதில், குற்றவாளிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றுதான் பார்ப்போம்.
கண்காணிப்பு கேமராவில் குற்றவாளி உருவம் பதிவாகி இருந்தால் துப்பு துலக்குவது எளிதாகிவிடுகிறது.
இதேபோல் சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று தலைமறைவாகிவிட்டால், விபத்தை ஏற்படுத்திய காரை அடையாளம் காண்பதற்காக போக்குவரத்து சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவைத்தான் துருப்புச் சீட்டாக பயன்படுத்துவோம்.
சுமார் 15 சதவீத வழக்குகளில் கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர். இதைத் தொடர்ந்துதான் அனைத்து வீடுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்துகிறோம். சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து சிக்னல்க ளிலும் கேமரா உள்ளது. சில பகுதிகளில் பொதுமக்களே இணைந்து தங்கள் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துகின்றனர். இது வரவேற்கத்தக்கது.
கோயில்கள், ரயில், பேருந்து, விமான நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், வங்கிகள், நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், நகை அடகுக் கடைகள், வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம்.
தங்கும் விடுதி அறைகள், குளியல் அறைகள், உடை மாற்றும் அறை போன்ற தனி மனித அந்தரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளும் இடங்களில் கேமராக்கள் பொருத்துவது தவறு” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT