Published : 07 May 2017 12:04 PM
Last Updated : 07 May 2017 12:04 PM

திருப்பூர் அருகே போலீஸார் துரத்தியதால் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலைதடுமாறி கீழே விழுந்து பலி: உறவினர்கள் சடலத்துடன் சாலை மறியல் போராட்டம்

திருப்பூரில் அருகே சென்னிமலை பாளையத்தில் போலீஸார் துரத்தியதால் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலைதடுமாறி சாக்கடைக் குழிக்குள் விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து சுரேஷின் உறவினர்கள் 13 மணி நேரமாக சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கல்லாடாரி கிராமத்தைச் சார்ந்தவர் சுரேஷ் (32). இவருக்கு வெண்ணிலா என்கிற மனைவியும், வேடியப்பன், சாமிக்கண்ணு ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

சுரேஷ் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். சனிக்கிழமை இரவு கணபதி பாளையத்தில் உள்ள சகோதரரைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றார். உடன் சுரேஷின் அக்கா மகன் சிதம்பரம் (25) சென்றார்.

அப்போது வீரபாண்டி செக்போஸ்ட் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சுரேஷின் வாகனத்தை நிறுத்த முயற்சித்தனர். சுரேஷ் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால், போலீஸார் சுரேஷை துரத்திப் பிடிக்கும் வேகத்துடன் இருசக்கர வாகனத்தில் விரைந்தனர்.

சென்னிமலை பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சுரேஷ் வாகனத்தை விரட்டிப் பிடித்த போலீஸார் லத்தியால் தாக்கினர். இதனால் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிதம்பரம் குதித்து விட்டார். இந்நிலையில் சுரேஷ் நிலைதடுமாறி சாக்கடைக் குழிக்குள் கீழே விழுந்து உயிரிழந்தார்.

இச்சம்பவத்தை கண்டித்தும், காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், சுரேஷின் உறவினர்கள் சடலத்தை எடுக்க விடாமல் விடிய விடிய சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட எஸ்.பி. வி.எஸ்.உமா, மாவட்ட காவல் ஆணையர் திஷா மிட்டல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தைக் கைவிட சுரேஷின் உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

சுரேஷ் மனைவி வெண்ணிலாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவர்களின் இரு மகன்களின் கல்விச் செலவுக்காக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x