Published : 01 Feb 2014 12:00 AM
Last Updated : 01 Feb 2014 12:00 AM
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்கும் வண்டலூர் பொதுக்கூட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி தரக் கூடாது என உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான வழக்கறிஞர் கௌதம சன்னா பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு பா.ஜ.க. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, அக்கட்சி எம்.பி.க்களால் முன்மொழியப்பட்டால் மட்டுமே நரேந்திர மோடி, பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராகக் கருதப்படுவார். தேர்தலுக்கு முன்பே பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்திலோ அல்லது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலோ எந்த வித ஏற்பாடும் இல்லை.
இந்நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் என்று கூறிக் கொண்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்தே தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தி வருகிறார். இதற்காக பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
மேலும், பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களைச் சுற்றிலும் உள்ள வீடுகளிலும், வாகனங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக இஸ்லாமியர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் பிப்ரவரி 8-ம் தேதி சென்னை வண்டலூரில் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்துள்ளது. வண்டலூர், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி. வெளியூர்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் வண்டலூர் வழியாகத்தான் சென்றாக வேண்டும். நரேந்திர மோடி பேசும் பொதுக்கூட்டம் அங்கு நடைபெற்றால் பெருமளவு போக்குவரத்து நெரிசலும் சட்டம் ஒழுங்கு பாதிப்பும் ஏற்படும்.
ஆகவே, வண்டலூரில் நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதி தரக் கூடாது என காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மேலும், தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உள்ளதால், நரேந்திர மோடி தற்போது மேற்கொண்டுள்ள தேர்தல் பிரசாரத்தை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்ட தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர்
மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT