Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM
நாடாளுமன்றத் தொகுதியில் குருவும் சிஷ்யப்பிள்ளையும் மோதுவது உறுதியாகி இருக்கிறது.
பாஜக கூட்டணியில் விருதுநகர், தூத்துக்குடி, தேனி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு ஆகிய தொகுதிகள் மதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தூத்துக்குடியில் மாவட்டச் செயலாளர் ஜோயல், விருதுநகரில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, தேனியில் கொள்கை விளக்க அணிச் செயலாளர் அழகுசுந்தரம், காஞ்சிபுரத்தில் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, பெரும்புதூரில் மதிமுக பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, ஈரோட்டில் சிட்டிங் எம்.பி-யான கணேசமூர்த்தி ஆகியோரும் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. இதுதவிர மதிமுக-வுக்கு தஞ்சை அல்லது தென்காசி தொகுதி ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. மதிமுக-வின் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமாருக்காக தென்காசியை கேட்கிறது மதிமுக. ஆனால், இந்தத் தொகுதியை பாஜக-வும் கேட்பதால் இன்னும் இறுதி செய்யபடவில்லை.
இது ஒருபுறமிருக்க, தேனியில் திமுக வேட்பாளராக பொன்.முத்துராமலிங்கம் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதிக்கு மதிமுக தேர்வு செய்து வைத்திருக்கும் அழகுசுந்தரம் பொன்.முத்துவிடம் அரசியல் படித்த சிஷ்யப்பிள்ளை. மதிமுக-வில் பொன்.முத்துராமலிங்கம் துணைப் பொதுச்செயலாளராக இருந்தபோது அழகுசுந்தரம் கொள்கை விளக்க அணி துணைச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் அகமுடையார் இனத்தைச் சார்ந்தவர்கள். நாயுடு சமூகத்தவரின் ஓட்டுகள் அதிகம் உள்ள தொகுதி என்பதாலும் முல்லைப் பெரியாறு பிரச்சி னைக்காக நடைபயணம் உள்ளிட்ட அகிம்சை வழி போராட்டங்களை நடத்தியவர் வைகோ என்பதாலும் தேனி தொகுதி வாக்காளர்கள் மீது அபார நம்பிக்கை வைத்து வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது மதிமுக. ‘குருவை மிஞ்சிய சிஷ்யன்’ என்ற சொல்வழக்கு இங்கே ஜொலிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT