Published : 16 Mar 2017 10:33 AM
Last Updated : 16 Mar 2017 10:33 AM
ஆறுகளில் மணல் அள்ளும் விவகாரம் அறிந்திருப்பீர்கள். கிரானைட் கொள்ளையும் தெரியும். ஆனால், அதைவிட இரு மடங்கு அளவுக்கு தமிழகத்தின் ஏரிகள், கண் மாய்களிலும் விவசாய நிலங்களிலும் புறம்போக்கு நிலங்களிலும் சட்ட விரோதமாகவும் விதிமுறைகளை வளைத்தும் சிறு கனிமங்கள் கொள் ளையடிக்கப்படும் தகவல் தெரியுமா?
தமிழகத்தில் ஆற்று மணல் தொடங்கி ஏரிகள், கண்மாய்களில் சிறுகனிமங்கள் எடுப்பது வரையான அதிகாரம் முக்கியமான மூன்று நபர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதற்காக அவர்கள் வாங்கிக் குவித்த இயந்திரங்களின் மதிப்பு மட்டும் சுமார் 3 ஆயிரம் கோடிக்கும் அதிகம். இந்த இயந்திரங்களை வெறுமனே நிறுத்தி வைக்க முடியாது. அவை ஓடும் ஒவ்வொரு நிமிடமும் பணம். நாள் ஒன்றுக்கு குறைந்தது 20 மணி நேரமாவது அவை ஓடியாக வேண்டும். லாபம் கொட்டுகிற தொழில் இது. நாள் ஒன்றுக்கு சில நூறு கோடிகளாவது புழங்கும் தொழில் இது. அத்தனையும் உள்ளாட்சிகளுக்குச் செல்ல வேண்டிய பணம். மக்களாகிய உங்களுக்காக செலவழிக்க வேண்டிய பணம். ஆனால், எங்கே செல்கிறது அது?
ஆற்று மணல், கிரானைட் தவிர்த்து தமிழகத்தில் ஏரி மண், செங்கல் சூளைக்கான செம்மண், களிமண், சவுடு மண், நொரம்பு மண், சரளைக் கல், கூழாங்கற்கள், சுண்ணாம்புக் கற்கள், சோப்புக் கல் எனப்படும் மண்ணில் இருந்து நேரடியாக அறுத்து எடுக்கப்படும் செங்கல், சைனா களிமண், கருங்கல், ஜல்லிக் கற்கள், விவசாயத்துக்கான வண்டல் மண் உட்பட மொத்தம் 39 வகையான சிறுகனிமங்கள் இருக்கின்றன. தமிழ கத்தில் இவற்றின் ஒருநாள் தேவை மட்டும் சுமார் 50 ஆயிரம் லோடுகள். சட்டப்படி ஒரு லோடு என்பது இரண்டு யூனிட் மட்டுமே. ஆனால், சட்டப்படி எல்லாம் அடிப்பதில்லை. லாரி வாடகை கட்டுப்படியாகாது என்பார்கள். ஒரு லாரி லோடுக்கு ஆறு யூனிட் வரை அடிக்கிறார்கள். சராசரியாக மூன்று யூனிட் என்று வைத்துக்கொண்டால்கூட நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் யூனிட் மேற்கண்ட சிறு கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இது தமிழகத்தின் கணக்கு மட்டுமே. கேரளம், கர் நாடகம், ஆந்திராவுக்குச் செல்லும் சிறு கனிமங்களின் கணக்குத் தனி.
கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச் சரகம் நீடித்த மணல், சிறுகனிமங்க ளுக்கான மேலாண்மை வழிகாட்டி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 47 முதல் 59 பில்லியன் டன் மணல் மற்றும் சிறுகனிமங்கள் வெட்டி எடுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. அதேசமயம் இந்தியாவில் எவ்வளவு எடுக்கப் படுகிறது என்பதற்கான புள்ளிவிவரங் கள் இல்லை. சிறுகனிமங்கள் எடுக்கப்படுவதற்கான ஆதார புள்ளி விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. அந்த லட்சணத்தில்தான் நாம் இருக்கிறோம்.
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருத்தி வெளியிடப்பட்ட அரசாணையில் மேற்கண்ட சிறுகனிமங்களின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (பார்க்க பெட்டிச் செய்தி) மிக மிக குறைந்த விலை நிர்ணயம் இது. ஆறு கியூபிக் மீட்டர் என்பது ஒரு லோடு. அதாவது இரண்டு யூனிட். அதன்படி பார்த்தால் ஒரு லாரி சவுடு மண்ணின் விலை ரூ.50 மட்டுமே. சரளை மண் ஒரு லாரி ரூ.150 மட்டுமே. ஆனால், சந்தையில் இவை ரூ.5,000 முதல் 7000 வரை விற்பனை செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 100 மடங்கு வரை லாபம். வேறு எந்தத் தொழிலில் கிடைக்கும் இவ்வளவு லாபம்? உண்மையில் இதன் பெயர் தொழில் அல்ல. திருட்டு. லாபம் அல்ல, ஊழல் பணம்!
மேற்கண்ட தொகை உரிமக் கட்டணம் மட்டுமே. ஏலம் விட வேண்டும் என்பது நடைமுறை. அரசாங் கத்தின் ஏல நடைமுறைகள் எப்படி இருக்கும் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால், அந்த ஏலமும் கூட பல ஊர்களில் நடப்பது இல்லை. பகிரங் கமாக அள்ளுகிறார்கள்.
இதைவிட மதிப்பு மிக்க சில கனி மங்கள் எல்லாம் தமிழகத்தில் இருக் கின்றன. கணக்கில் வராத கனிமங்கள் அவை. உதாரணத்துக்கு சிலவற்றை பார்ப்போம்.
விருத்தாசலம் பகுதியில் எங்கும் விரவிக்கிடக்கிறது சைனா களிமண். அதனை ஆதாரமாக வைத்துதான் அங்கே பல ஆண்டுகளுக்கு முன்பு செராமிக் பொருட்களை செய்யும் தொழிற்பேட்டையை அரசு தொடங்கி யது. ஆனால், தொழிற்பேட்டை முடங்கிக் கிடக்க, சைனா களிமண் கொள்ளை அமோகமாக நடக்கிறது. பெரும் தொழிற்சாலைகளில் அபரி மிதமான வெப்பத்தை தாங்கும் வகையிலான கட்டுமானங்கள், புகைப் போக்கிகள், உலைகள் உள்ளிட்ட கட்டுமானங்களுக்கும் சுடுமண் பொம்மைகள் செய்யவும் பயன்படும் கனிமம் இது. ஆனால், எவ்வித முறைப்படுத்தலும் இல்லாமல் விருத்தாசலம் சுற்றுவட்டாரங்களில் லாரிகளில் கடத்தபடுகிறது இது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தாணிக்கோட்ட கம் சுற்றுவட்டார ஊர்களில் ஆங்காங்கே குழி பறித்து வைத்தி ருப்பார்கள். பெரிய குழிகளும் உண்டு. கொஞ்சம் தோண்டினால் கரிய நிறத்தில் மண் வரும். அதைத் தண்ணீரில் சலித்து எடுத்தால் கிடைப்பதுதான் சிலிக்கான் மண். சாதாரண கனிமம் அல்ல இது. சோலார் மின் கலங்கள், மைக்ரோ சிப், மெமரி கார்டு, சிம் கார்டுகள், கம்ப்யூட்டர் மதர் போர்டு உதிரி பாகங்கள் உட்பட ஏராளமான பொருட் கள் இதை வைத்துத் தயாரிக்கப் படுகின்றன. உள்ளூரில் இதை வாங்கி விற்பதற்கு என்றே இடைத்தரகர்களும் இருக்கிறார்கள். ஒரு கிலோ மண்ணை ரூ.80-க்கு விற்கிறார்கள். வெளிமார்க்கெட்டில் விலை பல மடங்கு அதிகம்.
வெள்ளக்கோயில், காங்கேயம் சுற்றுவட்டாரத்தில் ரத்தினம் உள்ளிட்ட அரிய வகை கற்களைத் தேடி அலையும் பெரும் கூட்டமே இருக்கிறது. உண் மையில் மேற்கண்ட கொங்கு மண்ணில் பவளம், ரத்தினம் உள்ளிட்ட அரிய வகை கற்கள் ஒரு காலத்தில் கொட்டிக்கிடந்தன.
இப்போதும் விவசாய நிலங்களில் அரிய வகை கற்கள் தட்டுப் படுவது உண்டு. கோவையைச் சேர்ந்த எழுத்தாளரும் சமூக செயல் பாட்டாளருமான இரா. முருகவேள் தனது ‘மிளிர்கல்’ புதினத்தில் இதுபற்றி விரிவாக பதிவு செய்திருப்பார். இவை தவிர வெள்ளை நிறத்தில் மிளிரும் ‘Quartz' எனப்படும் கற்கள் இங்கே பரவலாக கிடைக்கின்றன. தங்க நகை ஆபரணங்கள், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரம், கை கடிகாரங்கள், ரேடியா டிரான்ஸ் மீட்டர்கள், மெமரி கார்டுகள் தயாரிப்பிலும் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. இந்தக் கனிமமும் முறைப்படுத்தாமல் விற்பனை செய் யப்படுகிறது. சேலம் மாவட்டம் செட்டிச்சாவடி, டால்மியாபுரம் சுற்று வட்டாரங்களில் வெள்ளைக் கல் எனப்படும் கனிமம் பிரபலம். பெரிய இரும்பு உருக்கும் ஆலைகள் தொடங்கி சிறு இரும்பு பட்டறைகள் வரை இரும்பு உருக்காலைகள் இந்த மண்ணைக்கொண்டுதான் தயாரிக்கப் படுகின்றன. இதுவும் தற்போதுவரை முறையில்லாமல்தான் கடத்தி விற்பனை செய்யப்படுகிறது.
இப்போது சொல்லுங்கள், தமிழகத் தில் ஆற்று மணலும் கிரானைட்டும் மட்டும்தான் தமிழகத்தில் கொள்ளைப் போகிறதா?
சிறு கனிமங்கள் உரிமக் கட்டணம் (ஒரு கியூபிக் மீட்டருக்கு)
கடினமான கற்கள்: ரூ.35.00
ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட சிறுகற்கள்: ரூ.45.00
சோப்புக் கல் உள்ளிட்ட களிமண் கற்கள்: ரூ.25.00
சாதாரண மண்: ரூ.8.50
வண்டல், செம்மண், செங்கல் சூளை மண்: ரூ.20.00
சுண்ணாம்புக்கல்: ரூ.100.00
கூழாங்கற்கள்: ரூ.150.00
சைனா களி மண்: ரூ.40
- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT