Published : 09 Aug 2016 04:55 PM
Last Updated : 09 Aug 2016 04:55 PM
புதுச்சேரியில் கடந்த 2015ல் சிகரெட் விற்பனை ரூ.1,785 கோடியாகும். குறைந்த விற்பனை வரியால் இங்கு சிகரெட் கொள்முதல் செய்து தமிழகத்துக்கு கொண்டு சென்று விற்கும் மோசடி நடப்பதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. சிபிஐ விசாரித்தால் மிகப்பெரிய ஊழல் வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை கட்சித்தலைவர் அன்பழகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
''புகையிலை பொருட்களை வரி ஏய்ப்பு செய்து புதுச்சேரி கடத்தல் பிராந்தியமாக மாற்றப்பட்டுள்ளது. வரிகுறைப்பானது சில தனியார் வர்த்தக வியாபார நிறுவனங்களுக்கு மட்டும் செல்கிறது. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தேன். புதுச்சேரியில் கடந்த 2010ல் ரூ.176 கோடி, 2011ல் ரூ.295 கோடி, 2012ல் ரூ.368 கோடி, 2013ல் ரூ.327 கோடி, 2014ல் ரூ.722 கோடியாக சிகரெட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கணக்கில் உள்ளது. இந்த தொகை ரூ. 2015ல் ரூ.ஆயிரத்து 785 கோடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு 27.5 சதவீதம் விற்பனை வரி உள்ளது. ஆனால் புதுச்சேரியில் கடந்த ஆண்டு 15 சதவீதமும், தற்போது 20 சதவீதமாக உள்ளது. போதை பொருட்களுக்கு திட்டமிட்டு வரியை குறைத்து பொதுமக்களுக்கு நன்மை செய்வதுபோல செய்து தமிழகத்துக்கு வரி ஏய்ப்பு செய்கின்றனர்.
புதுச்சேரியில் சிகரெட் விற்பனை செய்வதாக கணக்கு காட்டி விற்பனை வரி மூலம் வரி ஏய்ப்பு செய்து அப்பொருளை தமிழகத்துக்கு கொண்டு சென்று விற்கின்றனர்.
சிகரெட்டில் மட்டும் ஆண்டுக்கு ரூ.200 கோடி தனியார் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து சம்பாதிக்கிறது. இதற்கு புதுவை அரசும் துணை சென்றுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை நடத்தப்பட்டால் மிகப்பெரும் ஊழல் வெளிச்சத்திற்குவரும். இதுதொடர்பாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வோம். ஆளுநரும் இதில் கவனம் செலுத்த வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT