Published : 31 Aug 2016 01:06 PM
Last Updated : 31 Aug 2016 01:06 PM
மாணவ, மாணவிகளை நல்வழிப் படுத்தும் நோக்கில், திருச்சி ஐயப்பன் கோயிலில் ஆத்திச்சூடி, திருக்குறள் ஒப்பித்தால் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சி லாசன்ஸ் சாலையில் ஐயப்பன் கோயில் உள்ளது. திருச்சி ஐயப்ப சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் வழக்கமாக நடைபெறும் பூஜை புனஸ்காரங்களுடன், தேவாரம் மற்றும் திருவாசக வகுப்புகள், யோகா, ரத்த தானம், பாலர் பள்ளி, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கோடைக் காலத்தில் நீர்மோர் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் ஆத்திச்சூடி, திருக்குறள் ஒப்பித்தால் ரொக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை ஐயப்பன் கோயில் நிர்வாகம் நடத்தி வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் 11 மணி வரை திருக்குறளும், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் 11 மணி வரை ஆத்திச்சூடியும் ஒப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
108 ஆத்திச்சூடிகளையும் பொருள் விளக்கத்துடன் ஒப்பித் தால் ரூ.100-ம், ஒவ்வொரு திருக்குறளுக்கும் ரூ.2-ம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. இதில், குறைந்தபட்சம் 100 திருக்குறள் ஒப்பிக்க வேண்டும்.
இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, ஆத்திச்சூடி, திருக்குறள் ஒப்பித்து ரொக்கப் பரிசுகளைப் பெற்று வரு கின்றனர். இதுவரை, திருக்குறள் ஒப்பித்தற்காக ரூ.9 ஆயிரமும், ஆத்திச்சூடி ஒப்பித்தற்காக ரூ.12 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐயப்பன் கோயில் நிர்வாகத்தினர் கூறியபோது, “சமுதாய சீர்கேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், மாணவ, மாணவி கள் தடம்மாறிச் சென்றுவிடாமல் இருக்கவும், அவர்கள் நன்ன டத்தை, நல்லொழுக்கத்துடன் இருக் கவும், திருக்குறள், ஆத்திச் சூடி ஒப்பிக்கும் நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. இவற்றை படித்து தெரிந்து கொள்ளும் எந்த ஒரு மாணவரும், நிச்சயம் தவறான வழிக்கு செல்லமாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதால், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இந்த திட்டத்துக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக, கிராமப்புற மாணவ, மாணவிகள் அதிக ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர். அவர்களை அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியர்களே அழைத்து வருகின்றனர். இதில், ஜாதி, இன, மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மாணவ, மாணவிகளும் கலந்துகொள்ளலாம். பொருள் விளக்கத்துடன் கூடிய ஆத்திச்சூடி குறிப்பேடு இங்கு இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.” என்றனர்.
உதவி செய்யும் மனப்பான்மை; போட்டி, பொறாமை இல்லா குணம்
இக்கோயிலில் பாலர் பள்ளி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. இதில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீதிபோதனை, ஆன்மிக சொற்பொழிவு, பக்திப் பாடல்கள் போன்றவை கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணி முதல் 11 மணி வரை இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன. இப்பள்ளி மாணவர்கள் வேட்டி, சட்டையும், மாணவிகள் பாவாடை சட்டையும் அணிந்து வர வேண்டும். ஆண்டுதோறும் ஜூன் முதல் சனிக்கிழமை இப்பாலர் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
“பாலர் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விட்டுக் கொடுத்தல், உதவி செய்யும் மனப்பான்மை, போட்டி பொறாமை இல்லாத எண்ணம் போன்றவை இயல்பாகவே ஏற்படுகிறது. இந்த ஆண்டு இவ்வகுப்பில் 262 பேர் படித்து வருகின்றனர்” என்று ஐயப்பன் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT