Published : 14 Apr 2017 10:38 AM
Last Updated : 14 Apr 2017 10:38 AM
தேனி மாவட்டம், மேகமலையில் ‘இம்பேஸியன்ஸ் மேகமலையானா’ என்ற புதிய வகை தாவரத்தை காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் அத்துறை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களது கண்டுபிடிப்புக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்தியாவில் மட்டும் 17 ஆயிரம் பூக்கும் தாவரங்களும், 3,722 நிலவாழ் பூவா தாவரங்களும் இருக்கின்றன. உலக அளவில் மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்கு இமாலயக் காடுகள், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவை தாவரச் செறிவுமிக்க பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத 5,725 பூக்கும் தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன. இவ்வகை தாவர இனங்களில் காடுகளில் மிகவும் அழகானதாகக் கருதப்படும் ‘காசித் தும்பை’ என்று வழக்குச் சொல்லால் அழைக்கப்படும் ‘இம்பேஸியன்ஸ்’ எனும் தாவர இனம் தனிச் சிறப்பு வாய்ந்தது.
ஓராண்டு முதல் பல்லாண்டு தாவரங்களாக வளரும் இவை ஆப்பிரிக்கா, மடகாஷ்கர், இந்தியா மற்றும் இலங்கையில் பரவிக் காணப்படுகின்றன.
245 வகைகள்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகளைக் கொண்ட இந்த தாவரம் மிகவும் அடர்த்தியான, ஈரப்பதமான மலைப்பகுதிகளிலும், பாறைகளிலும் மட்டும் வளரக் கூடியவை. இந்த தாவரங்கள் இந்தியாவில் ஏறக்குறைய 245 வகைகள் உள்ளன. பழனி மலை, ஆனை மலை, நீலகிரி, மூணாறு மற்றும் அகஸ்தியர் மலைகளில் இவ்வகை தாவரம் செறிந்து காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவ்வகைத் தாவர இனங்களில் புதிய வகைகளைக் கண்டறிய தற்போது தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், காந்திகிராம பல்கலைக்கழக உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ராமசுப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் செ.திவ்யா, ந.சசிகலா மற்றும் சு.அஞ்சனா ஆகியோர், தங்களுடைய சமீபத்திய தாவர இனங்கள் தேடலில், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான மேகமலை வனப்பகுதிகளில் உள்ள புல்வெளிப் பரப்புகளில் இம்பேஸியன்ஸ் தாவர வகைகளில் புதிய வகை தாவர சிற்றினத்தை கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து உத விப் பேராசிரியர் ராம சுப்பு கூறியதாவது: மேகமலையில் கண்டு பிடித்துள்ள புதிய தாவ ரத்துக்கு ‘இம்பேஸி யன்ஸ் மேகமலை யானா’ என பெயரிடப் பட்டுள்ளது. 28 செ.மீ. முதல் 42 செ.மீ. உயரம் வளரக்கூடிய குறுஞ்செடி. வெளிர் சிவப்பு நிறத்துடன் அடர் மஞ்சள் நிறத்தில் பூக்களைக் கொண்டது.
பொதுவாக ஜூலை முதல் அக்டோபர் வரை பூக்கும் இயல்பு கொண்ட இவை, கடல் மட்டத்துக்கு மேல் 1,451 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் ஈரப்பதமான பாறைப் பகுதிகளில் வளரும். வருடத்தில் மே முதல் ஜூன் வரை விதைகள் முளைக்கத் தொடங்கி முழுவதுமாக வளர்ச்சி அடைந்து ஜனவரி மாதங்களில் அழிந்துவிடும்.
இந்த புதிய தாவரம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, இந்திய தாவரவியல் ஆராய்ச்சி நிலையத்தில் உலர் தாவரமாக சமர்ப்பிக்கப்பட் டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அழியும் தருவாயில்...
இம்பேஸியன்ஸ் தாவர இனங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான தாவரங்கள் அழியும் தருவாயில் உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது. கண்களைக் கொள்ளை கொள்ளும் பல்வேறு வண்ணங்களுடன் வேறுபட்ட அமைப்பைக் கொண்ட இந்த தாவரங்களின் பூக்களைச் சார்ந்து பல்வேறு பூச்சிகளும், வண்டுகளும் வாழ்கின்றன. குறிப்பிட்ட மண் வகை, மழைப்பொழிவு மற்றும் இடச்சூழலைச் சார்ந்து வளர்வதால், வேறு இடங்களுக்கு இவை அதிகமாக பரவுவது இல்லை. அதனால், இவ்வகை தாவரங்கள் மிக அபூர்வமாகி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT