Published : 31 Jan 2014 05:26 PM
Last Updated : 31 Jan 2014 05:26 PM
பல்கலைக்கழக ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் "சென்னை பல்கலைக்கழகத்தில் 96 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பர அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல்கள் இன்று முதல் நடைபெறவிருக்கின்றன.
இந்த ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும் தவறான இட ஒதுக்கீட்டு முறை தான்.
2000 ஆவது ஆண்டில் தமிழக அரசு பிறப்பித்த இட ஒதுக்கீட்டு ஆணைப்படி 100 புள்ளி சுழற்சி முறை இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2007 ஆம் ஆண்டில் சில பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீட்டு வழங்கப்பட்டதால், 100 புள்ளி சுழற்சி முறையை 200 புள்ளி சுழற்சி முறையாக மாற்றி தமிழக அரசு ஆணையிட்டது.
இதில்தான் குழப்பம் ஏற்பட்டது. 200 புள்ளி சுழற்சி முறை இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்ட போது, ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த 100 புள்ளி சுழற்சி முறையின் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால், எந்த குழப்பமும் ஏற்பட்டிருக்காது.
ஆனால், 100 புள்ளி சுழற்சி முறை அப்படியே கைவிடப்பட்டு, 200 புள்ளி சுழற்சி முறை புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டதால், முந்தைய முறையில் எந்த பிரிவுக்கெல்லாம் இட ஒதுக்கீடு கிடைத்ததோ, அவர்களுக்கே மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முந்தைய முறையில் இட ஒதுக்கீடு பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது.
எனவே, சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இன்று முதல் நடைபெற்று வரும் நேர்காணல்களை ரத்து செய்ய அரசு உத்தரவிட வேண்டும். 200 புள்ளி சுழற்சி முறையைகைவிட்டு, ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த 100 புள்ளி சுழற்சி முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயித்து பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்" என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT