Published : 07 Oct 2013 09:08 PM
Last Updated : 07 Oct 2013 09:08 PM
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் விரைவில் பேச்சு நடத்தி சுமுகத் தீர்வை கண்டறிவார்கள் என்று கொழும்பு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
அரசு முறைப் பயணமாக இன்று (திங்கள்கிழமை) இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸை சந்தித்துப் பேசினார்.
அப்போது, தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இலங்கை அமைச்சருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினோம். இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மீன்பிடி உரிமைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக விரைவில் இருநாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேசுவதற்கான நடவடிக்கை எடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இரு நாட்டு மீனவர்களே தங்கள் பிரச்சினைகளைப் பேசி சுமுகத் தீர்வைக் கண்டறிவார்கள்” என்றார்.
கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, நடப்பாண்டில் அதிக எண்ணிக்கையிலான தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். தற்போதைய புள்ளிவிவரப்படி சுமார் 112 தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான மீன்பிடிப் படகுகளும் இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனது இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, அதிபர் ராஜபக்ஷேவை நாளை (செவ்வாய்க்கிழமை) சல்மான் குர்ஷித் சந்தித்துப் பேசுகிறார். அப்போதும், தமிழக மீனவர் பிரச்சினை குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சினை
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து குர்ஷித் கூறும்போது, தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் அதிகாரப் பகிர்வு சரியான முறையில் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், “வடக்கு மாகாணத்தில் வெற்றிகரமாக தேர்ந்தல் நடந்து முடிந்திருக்கிறது. வடக்குப் பகுதி மக்களின் ஒளியமான எதிர்காலத்துக்கு இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT