Last Updated : 17 Sep, 2016 04:09 PM

 

Published : 17 Sep 2016 04:09 PM
Last Updated : 17 Sep 2016 04:09 PM

பிரபாகரன் 28 ஆண்டுக்கு முன் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் வைகோ

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், திமுக தலைவரும் தமிழகத்தின் அப்போதைய முதல்வருமான கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியிட்டிருக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

1989-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் இலங்கையில் அமைதியை நிலைநாட்ட இந்திய ராணுவம் அனுப்பிய ஐபிகேஎப் குழு அங்கு அநீதியை கட்டவிழ்த்துவிட்டதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் பிரபாகரன்.

கடிதத்தை தற்போது வெளியிட்டது குறித்து வைகோ 'தி இந்து' ஆங்கில நாளிதழிடம் கூறும்போது, "இலங்கை வனப்பகுதியில் பிரபாகரனை நான் சந்தித்தபோது அவர் இந்த கடிதத்தை எனக்குக் கொடுத்தார். அதிலிருந்து ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் நான் அக்கடிதத்தை கருணாநிதியிடம் கொடுத்தேன். ஆனால், அக்கடிதத்தை அழித்துவிட்டதாக கருணாநிதி பின்னாளில் என்னிடம் கூறினார். நான் அதன் பிரதி ஒன்றை இன்றளவும் பாதுகாத்து வைத்துள்ளேன். அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாலேயே அதனை இப்போது வெளியிடுகிறேன்" எனத் தெரிவித்தார்.

கருணாநிதியை 'எனது பெருமதிப்புக்கும் அன்புக்கும் உரிய அண்ணா" என்று அக்கடிதத்தில் பிரபாகரன் விளித்திருக்கிறார். இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ் தலைவர்கள் எல்லோரும் தங்களை கைவிட்டுவிட்ட நிலையில் வைகோ தனது உயிரை பனையம் வைத்து என்னையும் எனது சகாக்களையும் வந்து சந்தித்துள்ளார் என குறிப்பிட்டிருக்கிறார் பிரபாகரன்.

இனி அக்கடிதத்தின் உள்ளடக்கம் சுருக்கமாக..

"வைகோ தனது உயிரையும் பொருட்படுத்தாது எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் அடர்ந்த கானகத்தின் நடுவே என்னையும் எனது சக தோழர்களையும் சந்தித்திப் பேச வைத்துள்ள துணிச்சலையும் தமிழ்ப்பற்றையும் பார்க்கும்போது நான் எனது மொழிக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் இன்னும் ஆயிரம் தடவை இறக்கலாம் என்னும் மனத்தென்பே ஏற்படுகிறது.

அண்ணா (கருணாநிதி) உங்களது ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வந்துள்ளதையடுத்து நான் பெருமைப்படுகிறேன். இனித் தமிழகத்தின் தமிழ் இன உணர்வு மீண்டும் தழைத்தோங்கும். எம்மைப் பொறுத்தவரை நாம் எந்த லட்சியத்திற்காக ஆயுதமேந்திப் போராட்டினோமோ அந்த லட்சத்தியத்தில் வென்று வாழ்வோம் அல்லது அந்த லட்சியத்திற்காக சந்தோசத்துடன் மடிவோம். இன்று இந்திய ஆக்கிரமிப்பு ராணுவத்தின் நடவடிக்கையால் எமது நாடு சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது.

இதனை தமிழகத்தின் கவனத்துக்கும், இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளின் கவனத்துக்கும் நீங்கள் கொண்டுவரவேண்டிய காலம் வந்துவிட்டது. அதனை நீங்களும் உங்கள் அமைப்பும் தான் செய்ய வேண்டும். அண்ணா நிச்சயம் எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்திய ஆக்கிரமிப்பாளர்களின் துரோகத்தை நீங்கள் தமிழகத்தின் கவனத்துக்கு கொண்டுவர உதவுவீர்கள் என நான் நம்புகிறேன். இங்கு மீண்டும் மிகப் பெரிய தாக்குதலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த அபாய சூழலை கருதித்தான் கோபால்சாமி அண்ணணை இந்த முற்றுகை வளையத்திலிருந்து மிகுந்த கவலையுடன் தமிழ் நாட்டுக்கு திரும்ப அனுப்பிவைத்துவிட்டேன்."

இவ்வாறு பிரபாகரன் கடிதத்தில் எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x