Published : 07 Jan 2014 07:34 PM
Last Updated : 07 Jan 2014 07:34 PM
ஆம் ஆத்மி கட்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதால் காங்கிரஸுக்கு பாதிப்பில்லை என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "ஆம் ஆத்மி கட்சி பல்வேறு மாநிலங்களில் போட்டியிடுவதால், காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. காங்கிரசைப் பொறுத்தவரை அது மிகப் பழமையான கட்சி.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும், அமைப்புகள் கொண்ட கட்சி காங்கிரஸ்தான். ஒன்பதரை ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறோம். எனவே, மக்கள் நிச்சயமாக காங்கிரஸுக்கு வாக்களிப்பார்கள்.
தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் இன்னும் முடிவு செய்யவில்லை. மாநில கட்சிகளே கூட்டணியை இன்னும் முடிவு செய்யாமல் திணறுகின்றன. காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி என்பதால், நாடு முழுவதும் பொதுவான ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும். அதற்கு இன்னும் ஒரு மாதத்துக்கு மேலாகும்.
பிப்ரவரி இறுதியில், காங்கிரஸ் தலைமை நாடு முழுவதுக்கும் ஒரு சிறப்பான வெற்றிக் கூட்டணியை அமைத்து அறிவிக்கும். காவிரி நடுவர் மன்றத்துக்கு தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இறுதித் தீர்ப்பை அமல்படுத்தி காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்" என்றார் வாசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT