Published : 18 Feb 2014 04:30 PM
Last Updated : 18 Feb 2014 04:30 PM
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் நெஞ்சங்களில் பால் வார்த்தது போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ளது. இதை நான் மட்டற்ற மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே தங்கள் இளமை காலத்தை கழித்துவிட்டனர்.
நீதிபதிகளின் தீர்ப்பில் தூக்கு தண்டனையை ரத்து செய்ததோடு, சட்ட திட்டத்திற்கு உட்பட்டு, இந்த மூவருக்கும் ஆயுள் தண்டனையை எவ்வளவு காலம் என்று தீர்மானித்து, இவர்களை விடுதலை செய்வது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 432-ன்படி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு அளித்துள்ளனர்.
இத்தீர்ப்பின் அடிப்படையில் இம்மூவரையும் விடுதலை செய்ய மனிதாபிமானத்தோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT