Published : 08 Oct 2013 12:16 PM
Last Updated : 08 Oct 2013 12:16 PM
சென்னை அடுத்த செங்கல்பட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ.594 கோடி செலவில் ஒருங்கிணைந்த நோய் தடுப்பு மருந்து தொழிற்சாலை அமைப்பதை எதிர்த்து 10 கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
100 ஏக்கரில் ஆலை
செங்கல்பட்டு அருகே திருமணி கிராமத்தில் 1954-ம் ஆண்டு மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எல்.டி.ஆர்.ஐ) தொடங்குவதற்காக 500 ஏக்கர் நிலம் அரசால் ஒதுக்கப்பட்டது. இதில் 430 ஏக்கர் உபரி நிலம் இந்திய அரசு சுகாதார திட்டங்களுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதில் இருந்து பயன்படுத்தப்படாத 100 ஏக்கர் நிலத்தில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த நோய் தடுப்பு மருந்து தொழிற்சாலை தொடங்குவதற்கு மத்திய அரசு ரூ.596 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அற்கான பணிகளை மத்திய அரசின் ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனம் தொடங்கியுள்ளது.
பெண்டாவேலன்ட் தடுப்பூசி, தட்டம்மை, மூளைக் காய்ச்சல் போன்ற பல்வேறு தடுப்பூசிகள் ஆண்டுக்கு சுமார் 7 கோடி முதல் 8 கோடி வரை இங்கு தயாரிக்கப்படும்.
இந்த ஒருங்கிணைந்த நோய் தடுப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள், வருங்கால புதிய தலைமுறைகளை பல்வேறு கொடிய நோய்களில் இருந்து காப்பாற்றுவதற்கு பயன்படும். இந்த தொழிற்சாலை யில் தயாரிக்கும் தடுப்பூசி மூலம் இந்தியாவில் பல லட்சம் குழந்தைகளை நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடியும். ஆகவே இந்த திட்டத்தை செங்கல்பட்டு அருகே திருமணியில் தொடங்கி அதற்கான பணிகளை மத்திய அரசு செய்துவருகிறது.
போலீஸ் குவிப்பு
இந்த ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு - திருப்போரூர் செல்லும் சாலையில் திருமணி, மேலோரிப்பாக்கம், நெம்மேலி, வல்லம் சோகண்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், காலை 9 மணி அளவில் சாலை மறியல் செல்வதற்காக திரண்டு வந்தனர். பொதுமக்கள் வருவதை அறிந்து, செங்கல்பட்டு-திருப்போரூர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருப்போரூர் கூட்டு சாலை அருகே சாலை மறியல் செய்வதற்கு பொதுமக்கள் முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை மீறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி யும் பொதுமக்கள் சாலை மறியலை கைவிடவில்லை.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் போலீசார் அதிரடியாக சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து பஸ், வேன்களில் ஏற்றி செங்கல்பட்டு சுற்றுப்புற பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் வைத்தனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் செங்கல்பட்டு-திருப்போரூர் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் கல்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் உள்பட பல்வேறு இடங்களில் வேலைக்கு செல்லும் அரசு, மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வாகன ஒட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
எதிர்ப்பு ஏன்?
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: இந்த ஆலை, குடியிருப்பு பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைய வேண்டும். ஆனால் குடியிருப்புகள் அதிகமாக உள்ள இடத்தின் அருகே தொடங்கப்படுகிறது. இதனால் நிலத்தடிநீர் பாதிக்கும், தொழிற்சாலை கழிவு காரணமாக கால்நடைகளுக்கும், 10 கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் நாங்கள் இந்த ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தோம் என்றனர்.
இந்த நோய் தடுப்பு மருத்து தொழிற்சாலை குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இந்த ஆலையின் மூலம் 500 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் இதில் 408 பேருக்கு நேரடியாகவும், 92 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இத்திட்டம், மாசுகட்டுப்பாட்டு வாரியம் உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நிறுவப்படுகிறது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT