Last Updated : 25 Mar, 2017 09:27 AM

 

Published : 25 Mar 2017 09:27 AM
Last Updated : 25 Mar 2017 09:27 AM

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து புராதன சின்னங்களை பாதுகாக்க ‘பிரண்ட்ஸ் ஆஃப் ஆர்க்கியாலஜி’- தொல்லியல் துறை புதிய முயற்சி

தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க ‘பிரண்ட்ஸ் ஆப் ஆர்க்கியாலஜி’ என்ற பெயரில் நண்பர்கள் குழுவை ஏற்படுத்தி, அவற்றைப் பாதுகாக்கும் புதிய முயற்சியை தொல்லியல் துறை மேற்கொண்டுள்ளது.

தமிழக அரசு தொல்லியல் துறையை கடந்த 1961-ம் ஆண்டு ஏற்படுத்தியது. தமிழகத் தில் மேற்கொள்ளப்படும் அகழ் வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப் படும் பண்டைய புராதன நினைவுச் சின்னங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதே இத்துறையின் முக்கிய நோக்கம்.

அத்துடன், கல்வெட்டுகளில் உள்ள குறிப்புகளை எடுத்து வெளியிடுதல் மற்றும் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்படும் பண்டைய புராதன நினைவுச் சின்னங்களை அருங்காட்சியகங்களில் பாது காத்து காட்சிப்படுத்துவது மற் றும் அகழ்வாராய்ச்சி தொடர்பான அரிய புத்தகங்களை நூலகங் களில் பாதுகாத்து வைப்பது உள்ளிட்ட பணிகளை இத்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச் சின்னங்களைச் சிலர் ஆக்கிரமிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே இவற்றை பாதுகாக்க நண்பர்கள் குழுவை தொல்லியல் துறை அமைத்துள் ளது. இதுகுறித்து, தொல்லியல் துறை இயக்குநர் முனைவர் டி.ஜகந்நாதன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

90 புராதன நினைவுச் சின்னம்

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 90 புராதன நினைவுச் சின்னங் கள் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட் டுள்ளன. இதில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 16 நினைவுச் சின்னங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12-ம், விழுப்புரம் மாவட்டத்தில் 11-ம் உள்ளன.

உதாரணமாக, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகாவில் உள்ள பாறை ஓவியங்கள்; வானூர் தாலுகா, உலகபுரம் கிராமத்தில் உள்ள சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள்; மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மகால்; ஆனைமலையில் உள்ள தீர்த்தங்கரர் கல்வெட்டுகள்; தூத் துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா, பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கட்டப்பொம்மன் கோட்டை, பிரிட்டிஷ் கல்லறை உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்த புராதன நினைவுச் சின் னங்களைச் சிலர் ஆக்கிரமிக் கின்றனர். இதனால், அந்த நினைவுச் சின்னங்கள் அழியும் நிலை ஏற்படுகிறது. அத்துடன், சில சமூக விரோதிகள் இவற்றை சேதப்படுத்தும் செயலை மேற் கொள்கின்றனர். இவற்றை பாது காக்க வேண்டியது அவசியம் ஆகும்.

எனவே இவற்றை பாதுகாக்க, பாதுகாக்கப்பட்ட புராதனச் சின்னங்கள் அமைந்துள்ள 90 இடங்களிலும் அப்பகுதியில் வசிக்கும் தன்னார்வலர்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், தொல்லி யல் துறை சிறப்பு அலுவலர்கள், காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடங்கிய ‘பிரண்ட்ஸ் ஆப் ஆர்க்கியாலஜி’ என்ற பெயரில் குழு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச் சின்னங்களை யாராவது ஆக்கிரமிப்பு செய்தாலோ சேதப்படுத்தினாலோ உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஜகந்நாதன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x