Published : 16 Dec 2013 10:15 AM
Last Updated : 16 Dec 2013 10:15 AM
2004-ல் அமைத்ததுபோல வரும் மக்களவைத் தேர்தலிலும் வெற்றிக் கூட்டணியை அமைத்து 3-வது முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றார் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
வரும் மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதற்கான வியூகத்தை காங்கிரஸ் அமைத்து வருகிறது. 2004-ல் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது போல, வரும் மக்களவைத் தேர்தலிலும் வெற்றிக் கூட்டணி அமைத்து, 3-வது முறை யாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி அதனை முடக்க வேண்டும் என நினைப்பது சரியல்ல.
நாடாளுமன்றத்தில் பிரச்சினை களை விவாதித்து, முறையாக தீர்த்துக்கொள்வதுதான் ஜனநாயக அமைப்பில் சரியாக இருக்கும். அதை முடக்குவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். லோக்பால் மசோதா மிகவும் முக்கியமானது என்பதால், 2 நாள்களுக்கு முன்னர் மா நிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதை முறையாக விவாதித்து நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்றாலும், எதிர்க்கட்சிகளுக்கு முழுமையான பங்குள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இலங்கை கடற்படையின் தவறான போக்கே மீனவர்களின் பிரச்சினைக்கு காரணம். இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இலங்கை அரசின் அதிகாரிகள், அமைச்சர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரு நாட்டு மீனவர்கள் சந்திக்கும் கூட்டத்தையும் நடத்த உள்ளது. அது சுமுகமாக முடியும் என்று நம்புகிறேன்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த மத்திய அரசு தனியாக அலுவலர்களை நியமித்துள்ளது. இருந்தாலும் மீனவர்களின் பிரச்சினை தொடர்கதையாக நீடிப்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றார் வாசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT