Published : 04 Apr 2017 05:54 PM
Last Updated : 04 Apr 2017 05:54 PM
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ஏப்ரல் 25-ம் தேதி கச்சத்தீவு முற்றுகைப் போராட்டத்தை ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை மீனவப் பிரநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் மீனவப் பிரநிதிகள் போஸ், சேசு தலைமையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கௌதமன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் குறித்து மீனவப் பிரநிதி போஸ் கூறியதாவது,
''கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 145 படகுகளையும் விடுவிக்கப்படாததால் இந்த படகுகளை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 7 அன்று இலங்கை செல்ல உள்ள மத்திய வெளியுறவுத்துறைச் செயலர் ஜெய்சங்கர் இந்தப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஏப்ரல் 25 அன்று தமிழக மீனவர்களை திரட்டி கச்சத்தீவை முற்றுகையிடப்படும்'' என்றார்.
சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்ட இயக்குநர் கௌதமன் கூறியதாவது,
''தமிழக மீனவர்கள் 800க்கும் மேற்பட்டோர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்றதையும், மீனவர் பிரிட்ஜோவின் படுகொலை பற்றியும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா மன்றத்தில் சமீபத்தில் உரையாற்றினேன்.
இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த படகுகளை விடுவிக்க 25ஆம் தேதி கச்சத்தீவு முற்றுகை போராட்டத்தை மீனவர்கள் அறிவித்துள்ளனர்.இந்த கச்சத்தீவு முற்றுகை போராட்டத்திற்கு தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவோடு தமிழகத்தின் அனைத்து மாவட்ட மீனவர்களும் கலந்து கொள்வார்கள்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT