Last Updated : 18 Jan, 2014 12:00 AM

 

Published : 18 Jan 2014 12:00 AM
Last Updated : 18 Jan 2014 12:00 AM

இலங்கை - தமிழக மீனவர்கள் 20-ல் பேச்சு: சென்னையில் ஏற்பாடுகள் தீவிரம்

சென்னையில் திங்கள்கிழமை நடக்கவுள்ள இலங்கை - தமிழக மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதேநேரத்தில், தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்று சில மீனவ சங்கத்தினர் புகார் கூறுகின்றனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,111 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். தமிழக அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாக, 836 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். 275 மீனவர்கள் இலங்கை சிறைகளில் இருந்து வந்தனர். இந்நிலையில், இருநாட்டு கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதனடிப்படையில், அந்தக் கூட்டத்தை சென்னையில் நடத்த அனுமதி கோரி, பிரதமருக்கு கடந்த டிசம்பரில் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். தொடர்ந்து அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரு நாட்டு மீனவர்கள் கூட்டம் தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளுடன், தமிழக மீன்வளத் துறை செயலாளர் டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு விவாதித்தார்.

அப்போது, இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு முன்பு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இலங்கை தரப்பிலும் அதே கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பிலும் கடந்த 13-ம் தேதி முதல் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, இருநாட்டு மீனவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடக்குமா என்பது உறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது. இதுகுறித்து ‘தி இந்து’ நிருபரிடம் தமிழக அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் 20-ம் தேதி இரு நாட்டு மீனவர்களிடையே கூட்டம் நடப்பது உறுதியாகிவிட்டது. இதில் கலந்து கொள்வோரின் பட்டியலும் தயாராகிவிட்டது. நந்தனத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தக் கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்’’ என தெரிவித்தனர்.

இந்நிலையில், சில மீனவர் சங்கங்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லை எனக் கூறியுள்ளன. தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ் கூறுகையில், “எங்கள் சங்கம் உள்பட முக்கியமான சங்கங்களுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. எப்படியிருந்தாலும் 1983-ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததுபோல், இரு நாட்டு மீனவர்களும் எங்கும் மீன்பிடித்துக் கொள்ளலாம் என்ற சூழல் உருவாக வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x