Published : 29 Jan 2017 03:17 PM
Last Updated : 29 Jan 2017 03:17 PM
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் உதவியால் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் சேதமடைந்து அழியும் நிலையில் இருந்த 18-ம் நூற்றாண்டு மற்றும் 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் எழுதப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரிய நூல்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. இவை விரைவில் மின்எண்மம் (டிஜிட்டலைசேஷன்) செய்து புதுப்பிக்கப்பட உள்ளன.
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அரிய வகை நூல்களை கண்டுபிடித்து அவற்றை புதுப்பித்து ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான நூல்கள் மீட்கப்பட்டு, அவைகளில் சேதமடையாமல் இருந்த 1,80,000 பக்கங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது காஞ்சிபுரம் பகுதியில் தொடர்ந்து பல அரிய நூல்கள் கிடைப்பதைத் தொடர்ந்து உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் உதவியுடன் அத்துறை இயக்குநர் விஜயராகவன் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் இருந்த பழங்கால நூல்களை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பல அரியவகை நூல்கள் சேதமடைந்து அழியும் நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பழைய நூல்களை கண்டுபிடிப்பதற்கு ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமின்றி தமிழ் ஆர்வலர்களும் உதவி வருகின்றனர். 1904-ம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ் பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் செயல்பட்டுள்ளது. அந்த அமைப்பு தமிழ்ச் சொற்களை எவ்வாறு பிழை நீக்கி எழுதுவது என்ற நூலை வெளியிட்டுள்ளது.
இதேபோல் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட (1904-ம் ஆண்டு) மருத்துவ குறிப்புகள் அடங்கிய நூல்கள், 1939-ம் ஆண்டு திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய திருப்புகழ் அமிர்தம் என்ற நூலின் 15 தொகுதி, 1904-ம் ஆண்டு எழுதப்பட்ட திருக்குறள் பாலியல் அதிகாரம், 1908-ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட தனிப்பாடல் திரட்டு, 1913-ம் ஆண்டு அச்சிடப்பட்ட திருவிளையாடல் புராணம் போன்ற அரிய நூல்கள் சேதமடைந்த நிலையில் இந்த ஆய்வின்போது கிடைத்துள்ளன.
இதேபோல் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிங்காரவேல் தேசிகர் எழுதிய காஞ்சிபுரம் குமரக்கோட்ட பஞ்சரத்தினம், ராமச்சந்திர தேசிகர் எழுதிய பட்டணத்து பிள்ளையார் புராணம் போன்ற நூல்களும் கிடைத்துள்ளன. ஆராய்ச்சி மாணவர்கள் உதவியுடன் மீட்கப்பட்ட இந்த நூல்கள் விரைவில் புதுப்பிக்கப்பட உள்ளன.
இது குறித்து உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர்
விஜயராகவன் கூறியது: குமரக்கோட்டம் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் கிடைத்துள்ளன. மருத்துவம் சார்ந்த நூல்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட முயற்சியில் இலக்கிய, புராண நூல்கள் கிடைத்துள்ளன. தொண்டை மண்டலம் ஆதீனத்தில் பழங்கால நூல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அங்கும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். இதுபோல் அரிய நூல்களை யாராவது கொடுத்தால் நாங்கள் புதுப்பித்து 25 நூல்கள் அவர்களுக்கு இலவசமாக வழங்குவோம். அதேபோல் மூல நூலும் மறு கட்டு (பைண்டிங்) செய்து தரப்படும். இதைவிட பழைய நூல்கள் உள்ளனவா என்றும் ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT