Published : 07 Aug 2016 11:36 AM
Last Updated : 07 Aug 2016 11:36 AM
உப்பாறு அணைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில், 5 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, இரவு பகலாக கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம் குண்ட டத்தை அடுத்துள்ள உப்பாறு அணைப்பகுதியில் நேற்று முன்தினம் மதியம் தாராபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அப்பகுதியில் உள்ள காற்றாலைக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது அணைப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த குண்டடம் போலீஸார், காரை சோதனையிட்டனர். பின், கார் சிறிதுதூரம் சென்ற நிலையில், அதில் சென்ற இளைஞர்கள், சிறுத்தை ஒன்று சாலையை கடந்ததாகக் கூறி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு போலீஸார் தேடும்பணியில் ஈடுபட்டனர்.
12 பேர் குழு
திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ஏ.பெரியசாமி, காங்கயம் வனச்சரகர் (பொ) மாரியப்பன் தலைமையில் வனத்துறையினர் 12 பேர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவோடு இரவாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக சொல்லப்பட்ட உப்பாறு அணையின் முகப்பு பகுதியின், மேற்குப் புறத்தில் 5 கேமராக்கள் பொருத்தப்பட்டன.
மர்ம நபர்கள்
இரவு முழுவதும் கேமரா பொருத்தி நடைபெற்ற வனத்துறையினரின் கண்காணிப்பு பணியில், சிறுத்தை எதுவும் சிக்கவில்லை. மாறாக, உப்பாறு அணைப்பகுதியில் நள்ளிரவில் முயல்வேட்டைக்கு சென்ற 3 நபர்களின் முகங்கள் பதிவாகியுள்ளன. அவர்களைப் பற்றி விசாரித்து வருகிறோம்.
கால் தடம்?
கேமரா பொருத்தப்படாத பகுதியில் 500- 600 மீட்டர் தூரத்துக்கு சிறுத்தையின் கால் தடம் போன்று ஒரு விலங்கின் கால் தடம் பதிவாகியுள்ளது. மிகவும் வறண்ட பகுதி என்பதால், கால் தடத்தை கண்டறிவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
எச்சரிக்கை
உப்பாறு அணை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த கெத்தல்ரேவ், சின்னமோளரைபட்டி, கள்ளிப் பாளையம் ஆகிய சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பொது மக்களுக்கு சிறுத்தையின் நடமாட்டம் ஏதேனும் இருந்தால், உடனடியாக தகவல் அளிக்கும்படி வனத்துறையினர் தொடர்பு எண் அளிக்கப்பட்டது.
ஆடு மற்றும் மாடுகளை வீடுகளில் வைத்துள்ள பொதுமக்களுக்கும், மேய்க்கச் செல்பவர்களுக்கும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பொதுவாகவே சிறுத்தை இரவில் நடமாடும் விலங்கு என்பதால், இரவுகளில் மட்டுமே கண்காணிக்க முடியும் என்றனர்.
சிறுத்தை பலி
குண்டடம் காவல் எல்லைக் குட்பட்ட இடையன்கிணறு பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காற்றாலையில், வால் கருகிய நிலையில் மின்சாரம் தாக்கி கடந்த பிப்.25-ம் தேதி சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. அமராவதி வனப்பகுதிக்குள் இருந்து தப்பி வந்திருக்கலாம் என, அப்போது வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், மீண்டும் இப்பகுதிக்கு சிறுத்தை வந்திருக் கலாம் என்கிற சந்தேகமும் வனத்துறையினரிடமும் எழுந்துள்ள தால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT