Published : 11 Nov 2013 12:00 AM
Last Updated : 11 Nov 2013 12:00 AM
மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் சென்னையில் வேகமாக நடந்து வருகின்றன. இந்த ரயிலுக்கான பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலை, சென்னையில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அல்ஸ்தாம் என்ற நிறுவனம் அமைத்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான பெட்டிகள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அங்கு பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு கணிசமான வருவாயும் கிடைத்து வருகிறது. இந்த ஆலை அமைக்கும் வாய்ப்பை கடந்த 2009-ம் ஆண்டில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிடம் இருந்து, அப்போதைய ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தட்டிச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், சென்னையில் மோனோ ரயில் திட்டம் தொடங்கப் பட உள்ளது. இதற்கான ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் தொழிற் சாலையை எப்படியாவது தமிழகத்துக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர், ‘தி இந்து’ நிருபரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதற்கான ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை யில் மோனோ ரயில் பெட்டி தயாரிப்பு ஆலையை அமைக்க தீவிர முயற்சிகளை அரசு மேற்கொள்ளும். இந்த ஆலை அமைந்தால், பல ஆயிரம் பேருக்கு வேலையும், அரசுக்கு வருவாயும் கிடைக்கும்.
சென்னையில் துறைமுகம் இருப்பதால் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு மோனோ ரயில் பெட்டிகளை ஏற்றுமதி செய்யவும் வசதியாக இருக்கும். இதற்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் ஆலைகளும் இங்கு அமைக்கப்படும் என்பதால் மேலும் பல நூறு பேருக்கு வேலை கிடைக்கும். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மோனோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அவற்றுக்குத் தேவையான பெட்டிகளை இங்கேயே தயாரிக்க முடியும். சென்னையில் இந்த தொழிற்சாலை அமைந்தால், மாநில அரசுக்கும் வருவாய் கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT