Published : 03 Oct 2013 08:46 AM Last Updated : 03 Oct 2013 08:46 AM
காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக் கோரி 3-வது நாளாக தியாகு உண்ணாவிரதம்
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு 3-வது நாளாக இன்று உண்ணாவிரதத்தைத் தொடர்ந்துள்ளார்.
இந்தப் போராட்டத்தை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று உண்ணாவிரதத்தில் பங்கு கொள்கிறார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தியாகு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். இந்தியா இலங்கைக்கு போர்க்கப்பல் கொடுப்பதை நிறுத்த வேண்டும், இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்க வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி நடத்தி வரும் இந்தப் போராட்டத்துக்கு அரசிடமிருந்து பதிலேதும் கிடைக்கவில்லை. சாதகமான பதில் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று தியாகு கூறினார்.
புதன்கிழமையன்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
முன்னதாக, தியாகுவின் இந்தப் போராட்டத்துக்கு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகே காவல்துறை அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
WRITE A COMMENT