Published : 18 Feb 2014 12:00 AM
Last Updated : 18 Feb 2014 12:00 AM

`இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடால் முஸ்லிம்களிடையே கருத்துப் புரட்சி ஏற்படும்’: அப்துல் ரகுமான்

கும்பகோணத்தில் வெள்ளிக் கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 8-ம் மாநாட்டில், தமிழ் முஸ்லிம் இசைமரபு குறித்து 98 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்மூலம், இஸ்லாம் இசைக்கு எதிரானதல்ல என்ற உண்மையை இஸ்லாமியர்களும் அறிந்துகொள்வர், கருத்துப் புரட்சி ஏற்படும் என்றார் மாநாட்டை நடத்திய இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவர் கவிஞர் அப்துல் ரகுமான்.

கவிஞர் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், முஸ்லிம்களின் இசைப்பாடல் மரபுகள் எனும் தலைப்பில் ஆய்வரங்கமும், இஸ்லாமிய பாரம்பரிய இசைமரபு சார்ந்த நிகழ்த்துக் கலைகள், கவியரங்கம், பட்டிமன்றம் ஆகியவையும் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற மாநாட்டின் நிறைவு விழாவில், மக்களிடையே படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், பள்ளிவாசல் நூலகங்களுக்கு ஏராளமான புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளி, கல்லூரி அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, மலேசியாவைச் சேர்ந்த ஐ.நா. சபை ஆசிய பசிபிக் வர்த்தக ஆலோசனைக்குழுத் தலைவர் டத்தோ ஹாஜி முகம்மது இக்பால் ஆகியோர் ரூ.10 ஆயிரத்துடன் கூடிய இலக்கியச் சுடர் விருதை 13 பேருக்கும், இசைச் சுடர் விருதுகளை 10 பேருக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது களை 8 பேருக்கும், சமுதாயச் சுடர் விருதை 4 பேருக்கும் வழங்கினர்.

3 நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 20 புத்தகங்களும், 2 இசை குறுந்தகடுகளும் வெளியிடப்பட்டன. மாநாட்டில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஓமன், குவைத், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாநாடு குறித்து கவிஞர் அப்துல் ரகுமான் கூறுகையில், “முதன்முறையாக தமிழ் முஸ்லிம்களின் இசைமரபை கருப்பொருளாக கொண்டு நடைபெற்ற இந்த அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இஸ்லாமியர்களிடையே மிகப்பெரும் கருத்துப் புரட்சியும், கருத்து மாற்றமும் ஏற்படும். நெடுங்காலமாக கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட இஸ்லாமிய இசைப் பாடகர்கள் மற்றும் பாடல் ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மாநாட்டில் 98 ஆய்வுக் கட்டுரைகள், 20 நூல்கள் மற்றும் 2 குறுந்தகடுகள் வெளியிடப்பட்டன. இம்மாநாட்டின் மூலம் தமிழ் முஸ்லிம்கள்கூட இஸ்லாமிய இசை வரவேற்புற்குரியதே என்ற உண்மையை அறிந்து கொள்வர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x