Published : 27 Mar 2017 11:53 AM
Last Updated : 27 Mar 2017 11:53 AM

குடிப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் மாறும் நிலத்தடி நீர்: தமிழகத்தில் அதிகரிக்கும் சிறுநீரகக் கல் நோயாளிகள்

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் தண்ணீரின் தரம் குறைந்து குடிப்பதற்கு ஏற்றதாக இல்லாததால் சிறுநீரக நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப் படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் மரங்களின் அடர்த்தி குறைந்து வருவதால், பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. பெருகிவரும் மக்கள்தொகை, தொழிற்சாலைகள் போன்ற வற்றால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. போதிய மழை பெய்யாத நிலையில், நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்த நீரில் உப்புத்தன்மை அதிகரித்து, குடிப்பதற்கு ஏற்றதாக இல்லாததால் மக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

மதுரை ‘ரெயின் ஸ்டாக்’ சேகரிப்பு நீர் மேலாண்மை தன்னார்வ நிறுவனம், மதுரை மாவட்டத்தில் மாணவர்கள், இளைஞர்களுடன் சேர்ந்து வீடுகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் ஆழ்துளைகிணறுகளின் ஆழத்தையும், நிலத்தடி நீரின் தரத்தையும் ஆய்வு செய்ததில், கடந்த ஓராண்டில் 170 அடி முதல் 450 அடி வரை நீர்மட்டம் குறைந்துள்ளது. பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் 600 அடி முதல் 1000 அடிக்கு கீழ் சென்றுள்ளது. தண்ணீரில் இருக்கும் உப்பின் அளவு, கடந்த ஓராண்டில் சராசரியாக 300-லிருந்து 600 பிபிஎம் உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆற்றல், சுற்றுச் சூழல், இயற்கை வளத்துறை தலைவர் முத்துச்செழியன் கூறிய தாவது:

20 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் சரா சரியாக 90 அடி முதல் 110 அடியில் குடிப்பதற்கு ஏற்ற சுவையான நிலத்தடி நீர் கிடைத்தது. ஆனால், தற்போது நிலத்தடி நீர் சராசரியாக 300 அடிக்கு கீழே சென்றுவிட்டது. காவிரி நதி பாயும் டெல்டா மாவட்டங்களில் கூட 200 அடிக்கு கீழேதான் நிலத்தடி நீர் கிடைக்கிறது. சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சராசரியாக 750 அடிக்கு கீழே நிலத்தடி நீர் சென்றுவிட்டது.

ஏற்கெனவே நிலத்தடி நீர் தேவைக்காக பல கோடி ஆழ் துளை கிணறுகள் அமைக்கப்பட்டு விட்டன. ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை கட்டுப்படுத்தவும், அதன் மூலம், நிலத்தடி நீர் அதிக அளவு உறிஞ்சப்படுவதைத் தடுக்கவும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றன.

பொதுவாக மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு நிலத்தடி நீரில் உப்பு மற்றும் உவர்ப்பு தன்மை மற்றும் பல தாது உப்புகள் உள்ளன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நச்சுப்பொருட்கள் மற்றும் நகர கழிவு நீர் மண்ணில் உட்செல்லும்போது அவை நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. அந்த நீரை அருந்துவோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது.

நிலத்தடி நீரில் காணப்படும் உப்பு, உவர்ப்பு, காரியம், தாமிரம், அலுமினியம், பாஸ்பரஸ், காப்பர், சிங் போன்ற உலோகங்கள் குறியீடு பல மாவட்டங்களில் குடிநீருக்கு உகந்தது அல்ல என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தரமில்லாத குடிநீர் மூலம் உடலுக்கு செல்லக்கூடிய, உப்புகள், உலோகங்களால் சுவாச குழாய், கல்லீரல், கணையம், சிறுநீர் குழாய், சீறுநீரகங்கள் மற்றும் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

பொதுவாக உடலில் 60 சதவீதத்துக்கு மேலாக நீர் தேவை என்பது அத்தியாவசியமானது. அது குறையும்போது உணவில் செல்லக்கூடிய உப்புகள் கரைய முடியாமல் அவை தேங்கி கல்லாக மாறி சிறுநீரக குழாய், சிறுநீரகத்தில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. தற்போது இத்தகைய நோய்கள் அதிக அளவு பெருகுவதற்கு நீரில் காணப்படும் இந்த குறைபாடுகளே காரணம் என மருத்துவ அறிக்கை கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குடிநீர் எப்படியிருக்க வேண்டும்?

குடிப்பதற்கு ஏற்ற நீரில் கார அமில தன்மை (பிஎச் அளவு) 6.5 முதல் 8.5-க்குள் இருக்க வேண்டும். உப்பின் அளவு ஒரு லிட்டரில் 2,000 மில்லி கிராம் வரை இருக்கலாம். கடினத்தன்மை அதிகப்பட்சமாக ஒரு லிட்டருக்கு 300 மில்லி கிராமும், உலோகங்களின் அளவு ஒரு லிட்டரில் 0.01 மில்லி கிராம் இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள நிலத்தடி நீரில் இந்த அளவுகள் மிக மோசமாக இருக்கின்றன


முத்துச்செழியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x