Published : 30 Mar 2014 10:26 AM
Last Updated : 30 Mar 2014 10:26 AM
வேட்புமனு தாக்கல் தொடங்கியதை யடுத்து, சனிக்கிழமை முதல் தமிழக போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத் தில் நிருபர்களுக்கு பிரவீன்குமார் சனிக்கிழமை அளித்த பேட்டி:
தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் படம் எடுத்து சிடி-யில் பதிவு செய்து கொடுப்பது, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு இ-மெயிலில் அனுப்புவது, தேர்தல் துறையின் இணையதளத்தில் நேரடியாக மெயில் அனுப்புவது போன்ற வசதிகள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர, ‘ஆண்டிராய்ட்’ வகை செல்போன்களில் படமெடுத்து எங்களுக்கு நேரடியாக அனுப்பும் (www.elections.tn.gov.in/complaints) வசதியை இப்போது அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த ‘ஆப்’-ஐ (செயலி), எங்கள் இணையதளத்தில் இருந்து செல்போன் உபயோகிப்பாளர் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
பணம் கொடுப்பது, பரிசுக் கூப்பன் தருவது, மது விநியோகம், அனுமதி பெறாத பேனர் மற்றும் போஸ்டர், ஆயுதங் கள் வைத்திருப்பது, அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்வது, பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்வது என 7 வகையாக புகார்கள் பிரிக் கப்பட்டுள்ளன. புகார் அனுப்புவோர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர், எந்த வகை புகார் என்பதைப் பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. மற்ற தகவல்கள் தேவையில்லை. உங்களது செல்போன் எண்கள் பதிவாகாது. நேரடியாக இன்டர்நெட் வழியாக செல்வதால், புகார்தாரர் யாரென்று அடையாளம் தெரியாது. புகார் தருவோர் விரும்பினால் மட்டும் அவர்களது பெயர், செல்போன் எண்களை குறிப்பிடலாம்.
10 சானல்கள் கண்காணிப்பு
பணம் கொடுத்து செய்தி வெளியிடுவது தொடர்பாக ஒரு அரசியல் கட்சி பிரமுகர் எங்களுக்கு புகார் அனுப்பியுள்ளார். அதை எனது தலைமையிலான குழு ஆய்வு செய்யும். அரசியல் கட்சிகளை ஆதரிக்கும் தொலைக்காட்சிகளையும் கண்காணித்து வருகிறோம். குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரித்து பணம் பெற்று செய்தி வெளியிடப்பட்டிருப்பதுபோல் தெரிந்தால் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான விளம்பர கட்டணம் குறிப்பிட்ட வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும். 10 தொலைக்காட்சி சானல்களை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம்.
பறக்கும் படை சோதனைகளில் வணிகர்கள் பாதிக்கப்படுவதாக எழுந்த புகார், நாங்கள் கொடுத்த விளக்கத்துக்குப் பிறகு குறைந்துவிட்டது. வெப்-கேம ராக மூலம் 20 ஆயிரம் வாக்குச்சாவடிகளைக் கண்காணிக் கும் பணியில் 35 ஆயிரம் மாணவர் கள் ஈடுபடுத்தப்படுவர். வழிபாட்டுத் தலங்களின் உள்ளே பிரச்சாரம் செய்யக்கூடாது. அதன் வாயிலில் பிரச்சாரம் செய்வதில் தவறேதும் இல்லை. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியதையடுத்து, மாநில போலீஸார் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டனர். இதற்கான அறிவிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT