Published : 30 Jan 2014 11:24 AM
Last Updated : 30 Jan 2014 11:24 AM
வருமான வரி வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதுதொடர்பான வழக்கை 4 மாதங்களில் விசாரிக்கு மாறும் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
1993-94-ம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதேபோல் முதல்வர் ஜெயலலி தாவும் அவரது தோழி சசிகலாவும் பங்குதாரர்களாக உள்ள சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 1991-92, 1992-93 நிதியாண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்ய வில்லை.
இதுதொடர்பாக வருமான வரித்துறை சார்பில் இருவர் மீதும் 1996-ல் குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வகையில் அவர்கள் மீது தற்போது 3 வழக்குகள் உள்ளன. அவற்றை விசாரணை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கக்கோரி முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் விசாரணை நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். அவற்றை விசாரித்த உயர் நீதிமன்றம் 2006-ம் ஆண்டில் இருவரது மனுக்களையும் தள்ளு படி செய்தது.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
வருமான வரி தாக்கல் செய் யாதது ஒரு குற்றம் இல்லை, வருமானம் இல்லை, அதனால் வருமான வரிக் கணக்கு தாக் கல் செய்யவில்லை என்று அவர்கள் தங்கள் மனுவில் குறிப் பிட்டிருந்தனர்.
அந்த மனு நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியது:
வேண்டுமென்றே ஒரு நபர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாமல் இருப்பது சட்டப்படி குற்றம். எனவே முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும் வழக்கை எதிர்கொண்டே ஆக வேண்டும். விசாரணை நீதிமன்றம் 4 மாதங்களுக்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT