Published : 19 Jan 2017 11:59 AM
Last Updated : 19 Jan 2017 11:59 AM

அலங்காநல்லூரால் எழுச்சிபெற்ற போராட்டம்: 3-வது நாளாக 30 கிராம மக்களுடன் மாணவர்கள், இளைஞர்கள் சாலை மறியல்

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி அலங்காநல்லூரில் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடந்தது.

கடந்த 16-ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்காததால் அலங்காநல்லூரில் சிறு தீப்பொறியாக பற்றிய போராட்டம் தற்போது தமிழகம் முழுவதும் கொளுந்து விட்டு எரிகிறது. ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் போராட்டத்துக்கு தொடக்கப் புள்ளியாகவும், மையப் புள்ளியாகவும் அலங்காநல்லூர் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு அலங்காநல்லூருக்கு பேரணியாக வந்தனர். வாகனங்கள் ஓடவில்லை. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் தனி தீவாகி உள்ளது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள், ஆண்கள், தங்கள் குழந்தைகளுடன் குடும்பம், குடும்பமாக லாரி, டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்களில் அலங்காநல்லூரில் திரண்டனர். அவர்கள் வாடிவாசல் சாலைக்கு பேரணியாக வந்து மறியலில் பங்கேற்றனர். அதனால், கடந்த மூன்று நாட்களை விட நேற்று கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. திட்டமிடப்படாத நிகழ்வாகத் தொடங்கிய இந்த போராட்டத்துக்கு, தற்போது தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆதரவு பெருகி அலைஅலையாக மக்கள் அலங்காநல்லூரில் திரண்ட வண்ணம் இருக்கின்றனர். அவர்கள் கறுப்புச் சட்டை அணிந்தும், கறுப்புக் கொடிகளை ஏற்றிக் கொண்டும் கோஷமிட்டனர்.

நேற்று முன்தினம் திமுக, அதிமுக எம்எல்ஏக்களை மக்கள் விரட்டி யதால் நேற்று அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் யாரும் வரவில்லை. உள்ளூர் மக்களும், இளைஞர்களும் ஒலிபெருக்கிகள் மூலம் போராட்டங்களை ஒருங்கிணைத்தனர். அவர்கள், ஒலிப்பெருக்கிகளில், தயதுசெய்து அலங்காநல்லூருக்கு அரசிய ல்வாதிகள், சினிமா பிரபலங்கள் வந்து அவமானப்படாதீர்கள். அரசியல் சாயம் பூசாதீர்கள், அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். இது மாணவர்கள், இளைஞர்கள், கிராம மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் என அறிவித்தவாறு இருந்தனர். அதனால், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் யாரும் நேற்று அலங்காநல்லூர் போராட்டம் நடந்த பகுதி பக்கமே தலைகாட்டவில்லை.

உள்ளூரைச் சேர்ந்த திமுக, அதிமுக பிரமுகர்கள், தங்கள் கட்சிகளை மறந்து இளைஞர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் வர வேண்டாம் என ஒரே குரலில் தெரிவித்தனர். போராட்டங்கள் ஒருபுறம் அலங்காநல்லூரில் தீவிரமாக நடந்தாலும், மற்றொரு புறம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், சட்டரீதியாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசித்து வரு கின்றனர். போராட்டத்தில் பங்கெடுக்கும் மாணவர்கள், இளைஞர்கள், ஊர்மக்களுக்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. அலங்காநல்லூர் மக்கள் வீடு களில் 3 நாட்களாக சமையல் செய்யவில்லை. இரவில் சாலைகளிலேயே தங்கி இருக்கின்றனர். மாணவர்களை போலீஸார் கைது செய்யாமல் இருக்க, பாதுகாப்பு வளையமாக இரவு முழுவதும் விழித்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரவில் தொடரும் போராட்டம்

இப்போராட்டத்தை முடக்கும் வகையில் மாலை 6 மணிக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் யாரும் கலைந்து செல்லாமல் மெழுகுவர்த்தி, செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் போராட்டத்தை தொடர்கின்றனர்.

போராட்டத்தை முன்னெடுக்கும் ஊர் முக்கியஸ்தர்கள், மாணவர்கள் அமைப்பினர், இளைஞர்கள் சிலரை போலீஸ் உயர் அதிகாரிகள் தனித்தனியாக அழைத்து மிரட்டும் தொனியில் பேசுவதாக கூறப்படுகிறது. ஆனாலும், அவர்களின் மிரட்டலுக்கு பணியாமல் உள்ளனர்.

தினமும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்துகொள்ள வருவதால் அலங்காநல்லூரில் கூட்டம் குறையாமல் உள்ளது.

3-வது ஆண்டாக திறக்கப்படாத வாடிவாசல்

அலங்காநல்லூர் மக்கள், ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசலை, கோயிலாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். மூன்றாவது ஆண்டாக இந்த பொங்கலுக்கு உச்ச நீதிமன்றத் தடையால் காளைகளை அவிழ்த்துவிட வாடிவாசல் திறக்கப்படவில்லை. அதனால், மழையில்லாமல் விவசாயம் பொய்த்து விட்டதாகவும், வறட்சியால் நோய், நொடிகள் ஏற்பட்டு தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அலங்காநல்லூரில் இரவிலும் கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுவோர் வாடிவாசலில் காளைகளை அவிழ்த்துவிட்டால் உச்ச நீதிமன்ற உத்தரவை பாதுகாக்க முடியாமல் போய்விடக்கூடும் என்றும், அதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் போலீஸார் வாடிவாசலுக்கு ‘சீல்’ வைத்து 3 அடுக்கு பாதுகாப்பு மேற்கொண்டுள்ளனர்.

5 டிஎஸ்பிக்கள், 10 இன்ஸ்பெக்டர்கள்,100 போலீஸார் வாடிவாசலைச் சுற்றி இரவு, பகலாக ஷிப்ட் முறையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அலங்காநல்லூர் மக்கள் கோரிக்கை என்ன?

பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் தமிழகம் முழுவதும் இருக்கும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக கருதி, இந்த ஆண்டே தமிழகத்தில் எல்லா இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும். காளைகளை அவிழ்த்து அலங்காநல்லூர் வாடிவாசலைத் திறக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், தமிழர்களோடு இணைந்த ஜல்லிக்கட்டு உணர்வை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லி தடையின்றி ஜல்லிக்கட்டு நடத்த உதவ வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு ஒத்துழைக்காவிட்டால், தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

‘காளைகள் எங்கள் வயிற்றில் பிறக்காத குழந்தைகள்’

பெண்கள் உருக்கம்

அலங்காநல்லூர் போராட்டத்தில் பங்கேற்ற பெண்களிடம் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி கருத்து கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

அலங்காநல்லூரைச் சேர்ந்த மீனா (57) கூறியது: எங்க வீட்டுல வளர்க்குற ஜல்லிக்கட்டுக் காளை என் வயிற்றில் பிறக்காத குழந்தை. நாங்களே எங்க புள்ளய கொடுமைப்படுத்துவோமா. நான் 2 வயசு முதல் ஜல்லிக்கட்டு பார்க்கிறேன். அந்த விளையாட்டு எங்க ஊரின் விளையாட்டு. அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். வீட்டில் சமையல் செஞ்சு மூனு நாளாச்சி. எங்கிருந்தோ வந்த குழந்தைகள், எங்க ஊருல சாப்பிடாம, சாலையில் படுத்து தூங்கும்போது நாம மட்டும் வீட்டுல சமைச்சு சொகுசா இருக்க முடியுமா. அதனால், வீட்டைப் பூட்டிவிட்டு மூனு நாளாக நாங்களும் ரோட்டுலதான் தூங்குறோம் என்றார்.

அலங்காநல்லூர் மருந்துக்கடை உரிமையாளர் ராஜா (40) கூறியது: வீட்டுல இருக்குற பெண்கள் எல்லாம், ஆர்ப்பாட்டத்துக்கு வந்துட்டாங்க. 3 நாளா தினமும் ஒருவேளைதான் சாப்பிடுறோம். 3 நாளா கடையை திறக்க பணம் இல்லை. எனக்கே இந்த நிலைமை என்றால், அன் றாட வேலைக்கு போறவங்க நிலைமை ரொம்ப மோசம். காளைகளை வாடிவாசலில் திறந்துவிடாம ஓய மாட்டோம். வெளியூர் மாணவர்கள் எங்க குழந்தைகள், பெண்களுக்கு சாப்பாடு, தண்ணீர், பிஸ்கட் வாங்கிக் கொடுக்குறாங்க. அவங்க எதுக்கு எங்க ஊருக்கு வந்து போராடணும், பாசம் காட்டணும். தமிழகமே எங்க ஊரைப் பார்த்து போராடுது. இதற்கு தீர்வு கிடைக்காம பின்வாங்க மாட்டோம் என்றார்.

முன்னாள் கவுன்சிலர் ராஜூ (54), நான் திமுகக்காரன்தான். அமைச்சர்களையும், எம்எல்ஏக்களையும் நம்பி ஏமாந்தது போதும். எல்லா கட்சிகளும், நாங்க இருக்கோம்னு சொல்லி கடைசில ஏமாத்திட்டாங்க. இனி அவங்கள நம்பி பிரயோஜனம் இல்ல. நாங்களே மாணவர்களுடன் போராட ஆரம்பித்து விட்டோம். கட்சிக்காரங்கள வராதீங்க எனச் சொல்லல. கட்சி வேஷ்டி கட்டி வராதீங்க. ஜல்லிக்கட்டு ஆர்வலராக மட்டும் வாங்க என்றுதான் சொல்கிறோம் என்றார்.

சும்மா வீம்பு காட்டுறாங்க....!

ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திரன், (40), போராட்டத்தால் எல்லா பொழப்பும் கெட்டுப் போனது. அதையும் தாண்டி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே ஆக வேண்டும் என்றுதான் போராடுகிறோம். ஊழல் பணத்தை கண்டுபிடிக்கிறேன். கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்கிறார்கள். மக்களுடைய கஷ்டத்தை எந்த அரசாங்கமும் புரிஞ்சுக்க மறுக்குறாங்க. வீம்புக்கு பீட்டாக்காரங்க சொல்லி, ஜல்லிக்கட்ட நடத்த விடமாட்டேன் என்கிறாங்க என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x