Published : 26 Feb 2017 11:07 AM
Last Updated : 26 Feb 2017 11:07 AM
பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில், கடும் மன வேதனைக்கு ஆளான நடிகை பாவனா, மன தைரியத்தால் அதிலிருந்து மீண்டு, நேற்று முதல் படப்பிடிப்புக்கு திரும்பினார். சிறைக்கு மதியம் சென்று குற்றவாளிகளையும் அடையாளம் காட்டினார்.
நடிகை பாவனாவை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், அவரது காரை ஓட்டி வந்த மார்ட்டின், பாவனாவிடம் முன்பு ஒட்டுநராக வேலைபார்த்த பெரும்பாவூர் சுனில்குமார், வடிவால் சலீம், கண்ணூர் பிரதீப், மணிகண்டன், விஜேஸ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாவனாவுக்கு ஆதரவாக மலையாள திரையுலகம், தென்னிந்திய நடிகர் சங்கம், தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்தன. கேரள முதல்வர் பினராயி விஜயன் அவருக்கு ஆறுதல் கூறியதோடு, துரித நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
சம்பவம் நடந்து ஒரு வாரமான நிலையில், நடிகர் பிரிதிவிராஜ் ஜோடியாக பாவனா நடிக்கும் ‘ஆதம்’ மலையாள திரைப்பட படப்பிடிப்பு, கொச்சி துறைமுகம் அருகே நேற்று நடந்தது. இப்படப்பிடிப்பில் நடிகை பாவனா பங்கேற்றார்.
செய்தியாளர் சந்திப்பு ரத்து
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்திக்க விரும்புவதாக தகவல் வந்ததால், படப்பிடிப்பு நடந்த பகுதியில் மலையாள ஊடகங்கள் நிரம்பி வழிந்தன. அங்கு வந்த கேரள காவல்துறை ஏடிஜிபி சந்தியா, “பாவனா இவ்விவகாரத்தில் மீடியாக்களை சந்திப்பது வழக்கின் விசாரணையை பாதிக்கும். அவர் எதை சொல்ல விரும்பினாலும், அதை நீதிமன்றத்தில் சொல்லலாம்” என கூறியதால், செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
சிறையில் அணிவகுப்பு
படப்பிடிப்புக்குப் பின், நேற்று மாலையே ஆலுவா கிளைச் சிறைக்கு பாவனா சென்றார். அங்கு நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் மார்ட்டின், சலீம், மணிகண்டன், பிரதீப் ஆகியோரை, அவர் அடையாளம் காட்டினார்.
‘ஆதம்’ பட நாயகன் பிரிதிவிராஜ், “பாவனாவின் மனோதிடமே அவரை மீட்டுக் கொண்டு வந்துள்ளது” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், தனது முகநூல் பக்கத்தில் “பெண்களை வக்கிரமாக சித்தரிக்கும் படங்களில் தான் இனி நடிக்கப் போவதில்லை. இதற்கு முன் நான் நடித்த படங்களில் அப்படி காட்சிகள் இருப்பின் மன்னிப்பு கோருகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
சுனில்குமாரிடம் விசாரணை
காக்கநாடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுனில்குமார், விஜேஸ் ஆகியோரை, விசாரணைக்காக மார்ச் 5-ம் தேதி வரை போலீஸார் வசம் ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. சுனில்குமாரின் காதலியிடமும் நேற்று முன்தினம் இரவு முதல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பாவனா கடத்தல் விவகாரத்துக்கு பின்பு, கொச்சி அருகே பொண்ணுருட்டி பகுதியில், சுனில்குமார் தனது நண்பர் வீட்டுக்குள் சுவர் ஏறிக் குதித்து செல்வது போன்ற சிசிடிவி கேமரா பதிவு போலீஸாருக்கு கிடைத்தது. அங்கு நேற்று சோதனையிட்ட போலீஸார், 3 சிம்கார்டுகள், 3 ஸ்மார்ட் போன், ஒரு ஐபேடு, ஒரு மெமரி கார்டு ஆகியவற்றை கைப்பற்றினர்.
சுனில்குமாரின் நண்பரான மெக்கானிக் ஒருவரை போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். சுனில்குமார் வந்தபோது தான் மது போதையில் இருந்ததால் தனக்கு எதுவும் தெரியாது என அவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT