Published : 13 Feb 2014 05:59 PM
Last Updated : 13 Feb 2014 05:59 PM

பாம்பன்: நாட்டுப் படகு மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பரப்பில் குருசடைத் தீவு, முயல் தீவு, அப்பா தீவு, நல்ல தண்ணி தீவு உள்ளிட்ட 21 தீவுகள் உள்ளன. இவற்றில் 13 வகையான கடற்புற்கள், 104 வகையான கடின பவளப்பாறைகள், 147 வகையான கடற்பாசிகள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல்குதிரை, கடல் அட்டை போன்ற அரியவகை உயிரினங்கள உள்ளன.

குறிப்பாக பாலுட்டி இனங்களைச் சேர்ந்த கடல் பசு மற்றும் டால்பின்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன. மேலும் இந்திய கடல் வளங்களில் கிடைக்கக்கூடிய 2 ஆயிரத்து 200 வகையான மீன்களில் அதிகமான மீன்கள் இந்த கடற்பகுதிகளில் தான் தான் உள்ளன.

பாரம்பரிய மீன்பிடி முறைகளை மட்டுமே பின்பற்றி வந்த தமிழக மீனவர்கள் இந்தியா நார்வே மீன்பிடி ஒப்பந்தத்திற்கு பிறகு இரட்டை மடி, சுருக்கு மடி உள்ளிட்ட வலைகளையும், இழுவைப் படகுகள், டைனமைட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தினர். இதனால் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் மீன் வளமும், பவளப்பாறைகளும் கடல் வாழ் உயிரினங்களுக்கான இனப் பெருக்க சூழல் மண்டலமும் பாதிக்கப்பட்டது. இதனால் பல கடல் வாழ் உயிரினங்கள் அழியும் நிலைக்கு இன்று வந்து விட்டன.

இதனால் கடல் வளம் அழிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் மீனவர்கள் இரட்டைமடி, சுருக்குமடி, இழுவைப் படகுகள் முதலியவற்றைப் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது.

ஆனாலும் விசைப்படகு மீனவர்கள் பலர் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பின்பற்றி வருவதாக தொடர்ந்து பாரம்பரிய மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கவில்லை.

இதனை கண்டித்தும் தடை செய்யப்பட்ட வலைகளை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்துவதைத் தடுக்க தமிழக அரசை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த ஒரு வார காலமாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம், பாம்பன் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டம் ஐந்தாவது நாளாக வியாழக்கிழமையும் நீடித்தது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன் கடற்கரைகளில் ஆழமில்லாப் பகுதிகளில் நாட்டுப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்கிழமை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகம் எதிரே நாட்டுப் படகு மீனவ சங்கப் பிரநிதி ஜெரோமியஸ் தலைமையில் நூற்றுக்கணக்கான ராமேஸ்வரம், பாம்பன், திருப்பாலைக்குடி, நம்புத்தாளை, தேவிப்பட்டிணம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் தமிழக மீனவர்கள் இரட்டை மடி, சுருக்கு மடி பயன்படுத்தி கடல் வளத்தை அழிப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இன்று பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாம்பன் நாட்டுப் படகு மீனவ சங்கப் பிரநிதி எட்வின் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் செந்தில்வேல், ராமேஸ்வரம் தீவு நாட்டுப்படகு மீனவப் பிரநிதிகள் அருள், அலெக்ஸ் மற்றும் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் திரளாய் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x